அவ்வையாரின் விநாயகர் அகவல் இசை நயம் மிக்க தோத்திரப் பாடலாகவும், யோக ரகசியங்கள் பொதிந்த சாத்திர நுாலாகவும் உள்ளது. 72 வரிகள் கொண்ட அகவற்பாவுக்கு, ஆசிரியர் பொழிப்புரை, விரிவுரை இரண்டையும் அழகுற அமைத்துள்ளார். அகவுதல் என்றால் அழைத்தல் என்ற பொருளும் உண்டு.
இறுதி அடியில், ‘வித்தக விநாயக, உன் மணம் மிக்க திருவடியில் சரண் புகுகிறேன்’ என்று அகவல் முடிகிறது.
முதல் இரண்டு வரிகளில் விநாயகரின் திருவடியைச் சிறப்பித்து, இறுதி அடியில், ‘திருவடியே சரண்’ என்று முடித்திருப்பது, திருவடி முக்தி தரவல்லது என்பது விளக்கப்படுகிறது.
தனக்கொரு நாயகன் இல்லாத விநாயகனே உன் பாதங்களே சரணம். துறவிகள் செய்ய வேண்டுவனவும், இல்லறத்தார் செய்ய வேண்டிய கர்ம யோகம் குறித்து இந்த நுாலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யோகம் என்பது கர்ம யோக வாழ்க்கை. துறவு மேற்கொள்ளாமல் இல்லறத்தில் இருந்து கொண்டு செய்யும் தொழிலை, செயலை யோகமாகச் செய்வது (பக்., 27) காட்டப்பட்டுள்ளது.
அகவல் அமைப்பு, அகவலின் திரண்ட கருத்து ஆகிய தலைப்புகளில் பல இலக்கியங்களில் இருந்தும், புராணங்களில் இருந்தும் வேத உபநிஷத்துகளில் இருந்தும் கருத்து விளக்கம் தரப்படுகிறது.
அவ்வையார் அருளிய விநாயகர் அகவல், சிறுவர் முதல் பெரியவர் வரை, நாள்தோறும் பாராயணம் செய்யக்கூடிய யோகக் களஞ்சியமாகவும், ஞானக்களஞ்சியமாகவும் உள்ளது.
பேரா., க.மணி விநாயகர் அகவலை படித்து, உணர்ந்து, அனுபவித்து நல்லதொரு விளக்க உரை தந்துள்ளார். அனைவரும் படித்துப் பக்தி பரவசம் பெறலாம்.
– பேராசிரியர் ஆர்.நாராயணன்