கடந்த, 1735ம் ஆண்டு வாக்கில் மதராஸ் ராஜதானியின், 14வது கவர்னர், ‘மாடர்ன் பிட்’ என்பவரது முயற்சியால் பல நெசவாளர் குடும்பங்கள் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு, சென்னை யில் இப்போது சிந்தாதிரிப்பேட்டை என அழைக்கப்படும் பகுதியில் குடியமர்த்தப்பட்டன.
இந்த நெசவாளர்கள், ‘காலிகோ பிராண்ட்’ வகை துணிகளை கலை நேர்த்தியுடன் நெசவு செய்து தயாரிப்பதில் நிபுணர்கள்.
இந்தத் துணிக்கு அப்போது லண்டன் மாநகரில் ஏக டிமாண்டு. இந்த நெசவாளர்கள் முதலில் சின்ன சின்ன தறிகளை அமைத்து நெசவு செய்து வந்ததால் அப்பகுதி, ‘சின்ன தறிப் பேட்டை’ என்று பெயர் வந்தது. அதுவே நாளடைவில் உருமாறி, ‘சிந்தாதிரிப்பேட்டை’ என்றாகி விட்டது.
பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களின் வாழ்விடமாக மாறிப் போன இந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கும் விதத்தில் இந்த நாவலை உருவாக்கி இருக்கிறார் ஆசிரியர். ‘சென்னைத் தமிழ்’ என்றே அடையாளம் காட்டப்படும் பிரயோகங்களை, நாவலின் கதாபாத்திரங்களில் சிலர் வெகு சரளமாகப் பேசுகின்றனர்.
சென்னையின் விளிம்பு நிலை மாந்தர்கள் வாழும் வாழ்க்கையை துளிக்கூட மிகைப்படுத்தாமல், அப்படியே படு யதார்த்தமாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். ஆனால், நகோமியம்மா போன்ற பெண் பாத்திரங்கள் என்ன தான் அவர்களுக்கு இயல்பான மொழியில் ஆபாசமாகப் பேசினாலும், ‘அந்த’ வார்த்தைகளை அச்சில் படிக்கும்போது கூச்சத்தால் வாசகர்கள் நெளிவர்!
– மயிலை கேசி