தமிழ்மொழியின் வளமைக்கும், உயிர்ப்புக்கும் பெருமை சேர்த்தோர் ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஆவர். தமிழ் மொழியின் இருண்ட காலமான களப்பிரர்கள் காலத்தில், தமிழை அழியாமல் காத்தவர்கள் அவர்கள். பாவைப் பாடல் என்ற புதிய இலக்கிய மரபைத் தமிழுக்குத் தந்த பெருமை ஆண்டாள் நாச்சியாருக்கே உரியது.
அக்றிணை பன்மைக்கு, ‘கள்’ விகுதி சேர்த்து எழுதும் முறையை ஆண்டாள் பாடலால் அறியலாம் என்று பெரியோர் கூறுவர். அத்தகு ஆண்டாளின் திருப்பாவையையும், நாச்சியார் திருமொழியையும் விளக்கும் உரை நுாலாக, இந்நுால் உள்ளது.
ஆண்டாளின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுவதும், ஆண்டாளின் காலத்தை, பேரா., மு.இராகவையங்கார் நுாலின் துணை கொண்டு உறுதிப்படுத்துவதும், பாவை நோன்பை தைந்நீராடல் என்ற சங்க இலக்கியத் தொடருடன் ஒப்பிடுவதும், திருப்பாவையுடன், திருவெம்பாவையை ஒப்பிட்டு விளக்குவதும், ‘பறை’ என்ற சொல், பல பாசுரங்களில், பல பொருட்களில் வருவதைக் குறிப்பிடுவதும், ‘காமம் மிக்க கழிபடர் கிளவி’ என்று அகத்துறையுடன் கூறுவதும், நுாலாசிரியரின் ஆழ்ந்த, அகன்ற அறிவாற்றலுக்கு எடுத்துக்காட்டுகள்.
பழகு தமிழில், எளிய நடையில், ஆண்டாளின் பாசுரங்கள் குறித்து விளக்கும் அச்சுப் பிழையில்லாத அருமையான நுால்.