ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, ஓங்கிக் குரல் கொடுப்பவர் கொ.மா.கோதண்டம். முற்போக்கு எழுத்தாளரான இவர் கதைகள் ரஷ்ய, ஆங்கில, ஹிந்தி, தெலுங்கு, சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆரண்ய காண்டம் என்ற இவரது குறிஞ்சிக் கதைகள் முதுகலை படிப்பிற்கு பாடமாக உள்ளது!
கொ.மா.கோதண்டம் நாவல்கள் என்ற இந்த நுாலில் மூன்று நாவல்கள் இடம் பெற்றுள்ளன. அவை, ஏலச்சிகரம், குறிஞ்சாம் பூ, ஜன்ம பூமிகள்.
ஏலச்சிகரம் என்பது தமிழக ஏலத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய தமிழின் முதல் நாவல்!
மலைப்பிரதேசத்தின் கடும் குளிரிலும், கொடிய விலங்குகளால் ஏற்படும் திடீர் ஆபத்து, அட்டைக்கடி, கணக்கப் பிள்ளை, கங்காணி கொடுமைகளை சகித்துக் கொண்டு, வெளி உலகத் தொடர்புகள் ஏதுமின்றி குறைந்த கூலிக்கு கொத்தடிமைகளாய் வேலை செய்யும் தொழிலாளர் நிலையைப் படிக்கும்போது, ரத்தக் கண்ணீர் பெருகும்.
மயில் கண்ணு, முத்தையன், பொன்னுமாரி காதல் கதை, நம்மை உருக்கிவிடும்.
குறிஞ்சாம் பூ கதையில், மேற்குமலை அடிவாரங்களில் பழங்குடி மக்களாகிய, ‘பளியர்’ என்ற இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர். வளம் நிறைந்த மலை வனங்களில் வாழும் அவர்கள் வாழ்க்கையோ பாலைவன வாழ்க்கையாக அமைந்துள்ளது.
வயிற்றுக்கு உணவு தேடும் பிரச்னை ஒன்றே மிகப் பெரிய பூதாகாரமான பிரச்னையாகி, அதை சமாளிக்க முடியாமல் அல்லல்படுகின்றனர். அவர்களுக்கு நல்ல பாதை கிடையாது; மின்சாரம் கிடையாது.
பஸ், ரயிலைக் கூட பார்த்து அறியாத பாமர மக்கள்! சிந்தனை எல்லாம் வயிற்றுப் பாட்டுக்கே காரணமாகிப் போவதால், கற்பு என்பது கூட அவர்களுக்கு ஒரு பிரச்னையாகத் தெரிவது இல்லை! பளியர்கள் வாழ்க்கை பற்றி தமிழில் வரும் முதல் நாவல் இதுவே!
ஜன்ம பூமிகள் நாவலில் இலங்கை முள்காடு மலைகளை வளம் கொழிக்க வைத்து, தங்களையே இழந்த இந்திய தோட்டத் தொழிலாளர் பற்றிய கதை.
இலங்கையில் தமிழ் மக்கள் குறிப்பாக, மலை நாட்டுத் தோட்டத் தொழிலாளர் படும் துன்பங்களை இந்த நாவல் சொல்கிறது. இலக்கியப் பொக்கிஷமான இந்நுாலில், மூன்று நாவல்களுமே சோகச் சித்திரங்கள்.
– எஸ்.குரு