காஞ்சி மகா சுவாமிகள், ‘விநய சம்பத்’ என்ற ஆதிசங்கரரின் சவுந்தர்யலகரி துதியை விளக்கியிருக்கும் கட்டுரை உள்ளது. ஆதவனுக்கு அவன் கிரணத்து அங்கியைக் கொண்டு வழிபடுகிறோம். அதாவது சூரிய வழிபாட்டில் கற்பூர தீபம் காட்டுவது போல என்ற கருத்துடைய சுலோகத்தை இதில் காணலாம். நரகாசுரனை வதம் செய்த கிருஷ்ண பரமாத்மாவை யுத்தத்தில் வழி நடத்திய சத்தியபாமா அட்டை வண்ணப்படமாகவும், கட்டுரையாகவும் மிளிர்கிறது.
ஆண்டாள் தேசத்தில் ராம்கோ ராஜாவின் பணி, அவரது ஆன்மிக உணர்வின் கருத்தை பிரதிபலிப்பதாகும். கவி எனக் கிடந்த கோதாவரி என்ற கம்பர் வாக்கை அனைவரும் அறிவர். ஆனால், புகழ்பெற்ற கவுதம முனிவர் சிவபெருமானை வேண்டி, அந்த நதியை உற்பத்தி செய்த வரலாறும், வண்ணப்படமும் உள்ளது.
‘ஜெனரல் மோட்டார்ஸ்’ நிறுவனம் தன் ஊழியர் நலன் கருதி வாரத்தின் ஏழு நாட்களும் வித விதமான உணவைத் தருவதையும், அதில், ‘பேலியோ டயட்’ என்ற, ‘கார்போஹைட்ரேட்’ சத்து குறைந்த உணவு குறித்த விஷயம் சிந்திக்க வைக்கும்.
விம்பிள்டன் மைதானத்தில் உள்ள கண்காட்சியகம், பழங்கால வெண்கல சமையல் பொருட்கள், கைவிளக்குகள் என்று பல கலைப்பொருட்களை வீட்டினுள் பொக்கிஷமாக, ஐந்து தலைமுறையாக பாதுகாத்து வரும் அரிய தகவல் என்று பல விஷயங்கள் மலரில் அடக்கம். கல்கி கிருஷ்ணமூர்த்தியில் துவங்கி, பல சிறுகதைகள், ஜெயதேவன் உட்பட பலரது கவிதைகள் என்று மலர் நறுமணம் கொண்டதாக இருக்கிறது.