அ ன்னை கற்பகாம்பாள் வண்ண ஓவியம் சில்பி படைப்பில் முகப்பு அட்டையாக உள்ள இந்த மலர், பல்வேறு பகுதிகளை கொண்டது.
எடுத்த எடுப்பில் நடிகை சமந்தா, தன் பேட்டியில் பல தகவல்களைக் கூறியதுடன். திருமணத்திற்கு பின் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆக விரும்புவதாக கூறுகிறார்.
தெக்கத்தி மண்ணை சிலாகிக்கும், பரியேறும் பெருமாள் படத்தில் உள்ள மாரி யார் என்பதை படத்துடன் விளக்கும் தகவல், கைகளால் பிரஷ்ஷைப் பிடித்து வரைவதில் தான் ஈர்ப்பு என்று ஓவியர் ராஜசேகரன் கூறுவது, ‘டிவி’ பிரபலங்களின் வாழ்வில் காணப்படும் வசந்தங்கள் குறித்த கட்டுரைகள், வண்ணப்படத்துடன் நீலமலைக் குறிஞ்சி பற்றிய சிறப்புகள், தந்தை சொல்லை மந்திரமாகக் கருதும் கடம் கலைஞர் விநாயக் ராம், குருவாயூரன் வண்ணப் படத்துடன், நாராயண பட்டாத்திரி தன் நோயுடன் கிருஷ்ணனைப் பரவி பார்த்த மகிழ்ச்சியில் படைத்த காவியம் ஆகியவை கருத்திற்கு விருந்தாகும்.
அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், அனுமன், தட்சிணாமூர்த்தி, சூரியதேவன், முருகப்பெருமான் ஆகிய ஒரு பக்க வழு வழு தாளில் அமைந்த வண்ணப்படங்கள் அருமை.
தீபாவளி ஸ்வீட்ஸ் பகுதியில் திரட்டுப்பால், பாரம்பரிய பஜ்ஜி, தீபாவளி மருந்து ஆகியவை செய்முறைத் தகவலுடன் கூடிய வண்ணப்படம், சமையலறையில் ஈடுபடும் பலருக்கு மகிழ்ச்சி தரும். சிறுகதைகள், கவிதை, அழகான துணுக்குகள் என்று மலர் சிறப்பாக அமைந்திருக்கிறது.