அமுத சுரபி, 71 ஆண்டு கால இயக்கம் என்று வர்ணித்துக் கொள்ளும் வகையில், இந்த வண்ணப் படைப்பு உருவாகி இருக்கிறது. சமுதாய ஒழுக்கம் தறிகெட்டு விட்டது என்பதையும், அதனால், காந்தியக் கொள்கைகள் என்றும் நீடிக்கும் என்ற கருத்தில், மலர் பல விஷயங்களை தொட்டுக் காட்டுகிறது. சமய சமரசக் கருத்துகளை ராமகிருஷ்ணர் கூறியதை கமலாத்மானந்தா விளக்குகிறார். மனக்கவலையில் இருந்து விடுபட இறை வழிபாட்டை வலியுறுத்தும் திருக்குறள் கருத்தை சுவாமி ஓங்காரனந்தா விளக்கியிருக்கும் பான்மை சிறப்பானது.
அத்திரி மகரிஷியின் மனைவி அநசூயா சிறந்த கற்பினள். வறண்ட கானகத்தை பூத்துக் குலுங்கச் செய்த அப்பெண்ணின் தவத்தை, திருமகள் மகிழ்ச்சியுடன் ஏற்ற புராணக் கதை அட்டைப் படமாக மிளிர்கிறது. வள்ளலாரின் கருத்துகள் பரவ வன்முறைகள் குறையும் என்ற ஊரன் அடிகள் கட்டுரை, எப்பிறவியிலும் இன்ப எய்த கடலுார் அருகே உள்ள பாடலீஸ்வரர் தரிசனம் வாழ்வில் ஒரு முறையாவது தேவை என்ற தமிழகச் சிறப்பைக் காட்டும் கட்டுரைகளும் உள்ளன.
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் பார்வை, தற்கால இலக்கியப் பகுதியில் பிரபா ஸ்ரீ தேவன், வாஸந்தி, திருப்பூர் கிருஷ்ணன், மாலன் உள்ளிட்ட 11 சிறப்பாளர்களின் சிறுகதைகள், திரைத் துறை மற்றும் இளசை சுந்தரம் உள்ளிட்ட பலரது கவிதைகள் என்று இப்படைப்புக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன.