இதயத்துக்கான இன்ஜினியர்கள், மனதுக்கான மருத்துவர்கள் என்று இம்மலரில் உள்ள படைப்பாளிகள் உழைப்பைக் கோடிட்டு காட்டும் ஓம் சக்தி, அருட்செல்வர் மகாலிங்கத்தின் உணர்வை பிரதி பலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மனிதனை மட்டும் நேசிப்பதல்ல ஆன்ம நேயம் என்ற வள்ளலார் கருத்தை விளக்கும் அழகான வண்ணப்படம், வள்ளலார் நேசத்தைப் பறைசாற்றும் கருத்து ஓவியம்.
எத்தனால், பெட்ரோலுக்கு மாற்றாக இருக்கும் என்பதை அமரர் மகாலிங்கம் எழுதிய பழைய கட்டுரை, புதிய தகவல் சுரங்கம் ஆகும். ‘பாரிடை ஐந்தாய் போற்றி’ என்ற மணிவாசகர் அருட்சொல்லுக்கு, டாக்டர் சுதா சேஷய்யன் கட்டுரை விளக்கம் தருகிறது.
தமிழ் வளர்த்த மன்னர் பாண்டித்துரைத் தேவர் பெருமகன் ஆற்றிய தமிழ்ப்பணி அளவிடற்கரியது. அவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா.,வுக்கு எழுதிய கடிதங்கள், அவர் அனுப்பிய பதில்கள் கட்டுரை சிறப்பானது. அதில் அவர் பாண்டித்துரைத் தேவர், ‘சைவமஞ்சரி’ என்ற நுால் தொகுப்பை பாராட்டி எழுதிய பாக்களில், ‘தமிழ்ப்புவி செய் தவம்’ என்று மன்னரைப் பாராட்டியது, தமிழ் ஆர்வலர்கள் சிந்தனைக்கு விருந்தாகும்.
இந்தோனேஷியாவில் உள்ள பாலித்தீவில் மொத்த மக்கள் தொகையில், 95 சதவீதம் பேர் ஹிந்து சமயத்தினர் என்றும், அங்கு ஆயிரக்கணக்கான கோவில்கள் இருப்பதை குடவாயில் பாலசுப்பிரமணியம் தெளிவாக்கி இருக்கிறார். ‘அறவியல் சார்ந்த அறிவியல் கல்வி’ தேவை என்பதை விளக்கும் அரிய தகவல், கி.ரா., உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டோரின் எழுத்தோவியங்கள், ‘அகண்ட மார்பினாலோ, ஆறடி உயரத்தாலோ அல்ல மனிதன்’ என்பது உட்பட பல கவிதைகள், மலரை சிந்தனை பெட்டகமாக மலர வழிகாட்டுகின்றன.