தென் இந்தியாவின் சுருக்கமான வரலாறு என்றாலும், அதில் காலம் காலமாக பின்னியிருந்த பல துறைகளை, அதன் அங்கங்களை அலசும் வரலாற்று ஆய்வு நுால்.
இதன் தமிழ் மொழி பெயர்ப்பை முனைவர் சண்முகம் மேற்கொள்கையில், அதன் சீரிய தகவல் தடங்களை காட்டும் விதமாக சிறப்பாக செய்திருக்கிறார்.
குறிப்பாக நுாலாசிரியர் நொபோரு கராஷிமா தென் இந்திய வரலாற்றில் ஆழங்கால் பட்டவர் என்பதை இந்த நுாலில் அழகுறக் காணலாம்.
தமிழக வரலாற்றின் பன்முகப் பரிமாணங்களை, பல்வேறு தலைப்புகளில் கால வரையறை களுடன் அலசும் கட்டுரைகள் மட்டும் இன்றி, அதற்கான ஆவணமாக கல்வெட்டுகள், கலைநயத்தைத் தெளிவாக்கும் புகைப்படங்கள் என்ற பல்நோக்கு ஆவணமாக நுால் திகழ்கிறது.
பழமையும், புதுமையும் ஒன்றுக்கொன்று ஆதர வாக இருப்பதால், திராவிடர்களது முதல் வாழ்விடம் என்பதை நிர்ணயம் செய்வது சிரமம் என்ற கருத்து உள்ளது.
சங்க இலக்கியங்கள் முதலாவது நுாற்றாண்டுக்கு முந்தியவை என்பதற்கான ஆதாரங்கள், சமணர்களின் புலப்பெயர்ச்சி மாமன்னர் அசோகர் காலத்தில் இருந்து தொடங்கியது, காவிரிப்பூம்பட்டினத்தில் மிகவும் பழங்காலத்தில் இருந்த துறைமுகத்திற்கான கட்டட ஆதாரம் என்று முற்காலக் கருத்துக்களை ஆதாரங்களுடன் காட்டுவது சிறப்பாகும்.
அதே சமயம் ஆறு முதல், ஒன்பதாம் நுாற்றாண்டுகள் வரை தென் மாநிலங்களில் எழுந்த புதிய அரசுகள், பக்தி இயக்கம் ஆகியவை வரலாற்றுடன் காட்டப்படுகின்றன.
பதிமூன்றாம் நுாற்றாண்டின் தொடக்கம் முதல், பதினான்காம் நுாற்றாண்டின் இறுதி வரை தொடர்ச்சியான போரை அனுபவித்தததுடன், அரசின் கொடுங்கோன்மையை அனுபவித்த தென் இந்தியா பாழானது என்ற வரலாற்றுப் பதிவும் உண்டு.
நாயக்கர்கள், பாளையக்காரர்கள் ஆட்சி, தென் இந்தியாவில் சமயப் பரப்பு இயக்கங்கள், உள்நாட்டு மக்களின் ஆரம்பக் கல்வியில் முக்கியப் பங்காற்றிய தகவல் உள்ளது.
ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியில், கிறித்துவ அறிவு வளர்ச்சி சபையின் கிளையான விவிலிய பிரசார சபை முன்னணி கல்வி நிறுவனங்களை அமைத்த போதும், கிறித்துவ மதம் பரப்பும் கருதுகோளை கொண்டிருந்தது என்ற வரலாற்றுத் தகவல்கள் உள்ளன.
ஆட்சியில், பிராமணர் அல்லாதோர் தாக்கத்தை காமராஜர் ஆட்சிக்கு பின் உருவான விஷயம், ஒட்டு மொத்த இந்தியர் உணர்வால் இந்தியா சுதந்திரம் பெற்றது என்ற கருத்தைக் கொண்டிருந்தவர் அண்ணாதுரை என்பதுடன், இரு திராவிட கட்சிகளும் தேசிய அரசியலில், கூட்டணி என்று இணைந்ததால், சிறிய கட்சிகள் ஊக்கம் பெற்றன என்ற ஆய்வுகளும் உள்ளன.
மொத்தத்தில் நல்ல வரலாற்று ஆவணம். வாசகர்கள் அதிகதெளிவுபெற உதவும்.
– எம்.ஆர்.ஆர்.,