மனிதனுக்கான கடமைகள் என்னென்ன, ஒரு அரசனின் கடமைகள் என்னென்ன என்பதை காட்டுவதற்காகவே, ராம அவதாரத்தை விஷ்ணு எடுத்தார் என்பர்.
ராமாயணம் தமிழகத்துடன் நேரடியாக தொடர்புடைய வரலாறு அல்ல. ஆதிக்கவி வால்மீகி எழுதிய ராமாயணமே மூலாதாரமாக இருந்தாலும், கவிச் சக்கரவர்த்தி கம்பர் தமிழில் இயற்றிய ராமாயணமே சிறப்பான முதல் நுாலாக இன்றும் பார்க்கப்படுகிறது.
குலோத்துங்க சோழன் சபையில், கம்பர், ஒட்டக்கூத்தர் என, பல புலவர்கள் இருந்தனர். திருவெண்ணெய்நல்லுாரைச் சேர்ந்த சடையப்ப வள்ளல், ராமாயணத்தை தமிழில் இயற்றித் தரும்படி வேண்டி னார். அதன்படி, கம்பரும், ஒட்டக்கூத்தரும், தனித்தனியாக எழுதினர்.
ராமனின் பிறப்பு முதல், அவருடைய பட்டாபிஷேகம் வரை என, அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை, கம்பர் எழுதினார். ஆறு காண்டங்களாக அவர் எழுதிய ராமாயணம், மக்களுக்கு பிடித்தும் போனது ஆச்சரியமில்லை.
ஆனால், வால்மீகி எழுதிய ராமாயணத்தில், கடைசியாக உள்ள, உத்தர காண்டத்தை கம்பர் தொடவில்லை.
காரணம், அதில் பல்வேறு சோக சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒட்டக்கூத்தர், அந்த காண்டத்தையும் தமிழில் எழுதியிருந்தார்.
சீதையை ராமன் பிரிவது, லட்சுமணன் உட்பட சகோதரர்களை பிரிவது, தன் மகன்கள் தான் லவ – குச என்பது தெரியாமலே அவர்களுடன் சந்திப்பு என, இந்த காண்டத்தை படித்ததும் மனதை உருக வைத்துவிடும் அளவுக்கு சோகம் ததும்பி உள்ளது.
கடைசி காண்ட மான உத்தர காண்டத்தையும் இணைத்து, ஒரு முழுமையான, சம்பூர்ண ராமாயணத்தை தொகுத்துள்ளார், ஆசிரியர், ஜி.சுப்பிரமணியன்.
கடைசி காண்டத்தில் சோகம் அதிகமாக இருந்தாலும், அதுவும் நமக்கு படிப்பினையே. அந்த வகையில், ஒரு முழுமையான தொகுப்பாக இந்நுால் அமைந்து உள்ளது.
மிகவும் எளிமையான நடையில், ஒரு நாவலைப் படிப்பதை போன்று, மிக சுலபமாக, ராமாயண காதை இந்நுாலில் தொகுக்கப்பட்டுள்ளது. பெரிய எழுத்துகள், எளிய உரைநடை, படித்ததும் புரிந்து கொள்ளும் வகையில் இந்நுால் அமைந்துள்ளதற்காக பாராட்டுகள்.
– ஆராவமுதன்