ஏற்றுமதித் தொழில் என்பது வருமானம் ஈட்டும் தொழில். அதே சமயம் அதைப் பின்பற்ற ஏராளமான விதிகளும், நடைமுறைகளும் உள்ளன. அவற்றை அறிந்து கொள்ள வசதியாக, தமிழில் இந்த நுால் வந்திருப்பது சிறப்பாகும்.
ஏற்றுமதி – இறக்குமதிக்கான கொள்கை, 2002 – 2007ல் வந்த பின், பலரும் இத்தொழிலில் அதிக முனைப்பு காட்டுகின்றனர். உலக அளவில், 200 நாடுகள் இத்தொழிலில் ஈடுபட்ட போது, இந்தியா போன்ற வளரும் நாடுகள் இதில் காட்டும் அக்கறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நம் நாட்டில் ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகம் என்பதால், ஏற்றுமதியை அதிகரிக்க உலக அளவில் உள்ள போட்டிகளை எதிர்கொண்டாக வேண்டும். போட்டியுள்ள தொழில்களை அதற்கான முழுச்சிறப்பு உத்திகளுடன் உலக அரங்கில் கொண்டு செல்ல ஆசிரியர் வலியுறுத்துவது நல்ல வழிகாட்டும் செயலாகும்.
இதற்காக தேவைப்படும் நிதியை வங்கிகள் உட்பட, பல வழிகளில் சேர்ப்பதுடன், எது மதிப்புக்கூட்டிய பொருள் என்று கண்டறிந்து, ஏற்றுமதியில் ஈடுபட வேண்டும் என்பது ஆசிரியர் தரும் தகவல். வாழைப்பழக் கூழ், வாழைப்பழ தொக்கு என, பல வித வழிகளையும் தருகிறார். வேர்க்கடலை 5,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏற்றுமதி ஆகிறதாம். நமது சிந்தடிக் ஜவுளி வகைகள் அமெரிக்காவுக்கும் செல்கிறது.
இத்தொழிலில், முக்கியமாக ஆங்கிலத்தில் கடிதம் எழுத வேண்டும் என்றும், அதற்கான எளிய விளக்கமும் தரப்பட்டிருக்கின்றன. தவிர வும் ஏற்றுமதிக்காக வழங்கப்படும் வங்கிக்கடனுக்கு குறைந்த வட்டியே வசூலிக்கப்படுகிறது. தவிரவும் இதற்கான, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பிற்காக தனித்தனி, ‘கோட்’ என்ற விபரம் இடம் பெற்றிருப்பது மிகவும் சிறப்பானது. உலக நாடுகள் அவற்றின் நாணயங்கள் பெயர், அதன் உத்தேச ரூபாய் மதிப்பு ஆகியவை, இந்த நுாலில் காணப்படும் மற்றொரு சிறப்பம்சம்.
நல்ல தயாரிப்பு, சிறப்பான முயற்சியுடன் கூடிய இந்த நுால், நிச்சயம் பலரது வாழ்க்கையில் தெளிவு பிறக்க உதவும்.
– பாண்டியன்