கவிமணியை ஒரு பெருங்கவிஞர் என்ற முறையில் நாடு நன்கு அறியும். இந்நுால், கவிமணி கவிஞர் மட்டுமின்றி, வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வாளராகவும் இருந்திருக்கிறார் என்பதை பல ஆதாரங்களுடன் விளக்குகிறது. நுாலின் முதல் தலைப்பாக கவிமணியின் வாழ்வும் பணியும் பற்றி விளக்குகிறது.
கவிமணியின் கவிதைகள், வரலாற்று ஆய்வாளர், கவிமணியும் நாட்டார் வழக்காறுகளும், கவிமணியின் சமகால நோக்கு என்ற தலைப்புகளிலும் பின் இணைப்பாக ஆதார நுால்கள், கவிமணி ஆற்றிய உரைகள், கவிதைகள் போன்ற தகவல்கள் தரப்பட்டுள்ளன.
மொழி, வெறுப்பு, ஜாதி வெறுப்பு, பிராமண துவேசம் இல்லாதவர். அன்றைய திருவிதாங்கூர் தமிழறிஞர்களில் பலரும், சமஸ்கிருதத்தை வெறுக்காதவர்கள். கவிமணி திருவனந்தபுரத்தில் இருந்தபோது, வையாபுரிப் பிள்ளையுடன் சேர்ந்து சமஸ்கிருத சப்தரூபாவளியை மனனம் செய்திருக்கிறார் – பக்., 47. காந்தளூர் சாலை – குறிப்பு என்ற பகுதியில், ‘காந்தளூர்ச் சாலை கலமலத்தருளி’ என்ற முதல் ராஜராஜ சோழனைப் பற்றிய கல்வெட்டு ஒன்றில், பலர் பலவாறு பொருள் கொண்டாலும், கவிமணி அவர்கள், ‘காந்தளூரில் உள்ள அறச்சாலைகளில் எத்தனை பிராமணர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பதையும், அவர்களின் உண்கலன்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது, நிவந்தம் அளிப்பது ஆகியவற்றைப் பற்றியும், அரசன் செயல்படுத்தினான் என்பதை, ‘காந்தளூர் சாலை கலமலத்தருளி’ என்ற தொடர் விளக்குகிறது என, தன் நுண்மாண நுழைபுலத்தால் விளக்கம் அளித்துள்ளார் – பக்., 72.
கவிமணி ஒரு தேர்ந்த கல்வெட்டாய்வாளர், வரலாற்று ஆய்வாளராக செயல்பட்டு, பல வரலாற்றுச் செய்திகளை, ஆழமாக ஆராய்ந்து தமிழிலும், ஆங்கிலத்திலும், 47 கட்டுரைகள் எழுதி உள்ளார், போன்ற புதிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அனைவரும் படிக்க வேண்டிய நுாலாகும்.