பொதுவாக புலவர்கள் எல்லை கடந்த கற்பனைத் திறன் கொண்டவர்கள். ஒளி புகா இடத்திலும் கவி புகுவான் என்று சொல்லக் கேட்டதுண்டு. அசாத்திய கற்பனைத் திறன் காணாத உலகுக்கெல்லாம் உள்ளத்தை வழிநடத்தி உலா செல்வதோடு, ஊகங்களின் வழியே புதுமைகளை நிர்மாணிக்கிறது.
இவ்வுலகின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் கற்பனைகளாலும் கைதேர்ந்த ஊகங்களாலும் அடையப்பட்டவையே.
ஆனால், அவை அடையப்பெறும் முன், அதற்கான வித்தை யாரோ இட்டுவிட்டுச் செல்கின்றனர். அவை இயற்கையின் அங்கமாகவும் இருக்கலாம். நம்புதற்கரிய புனைவுகளாகவும் இருக்கலாம்.
எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அவற்றை அறிவியல் நோக்கில் நுணுகி அறியும் அறிவாற்றல் தமிழ்ப் புலவர்களுக்கும் இருந்திருக்கிறது. இவர்களுள் சித்தர்களும் அடங்குவர்.
நமது தமிழ் புலவர்கள் எவ்வாறு தமது அறிவியல் பதிவுகளில், குறிப்பாக தாவரவியல், உடலியல், உயிரியல், மனவியல், வானவியல், பூகோளவியல் போன்றவற்றில் சிறந்து விளங்கினர் என்பதையும் அவை எவ்வாறு நவீன கண்டுபிடிப்புகளுக்கும் முன்னரே பாடப்பட்டுவிட்டன என்பதையும் வரிசைப்படுத்தி ஆய்வுகள் செய்து வழங்கியிருக்கிறார்.
மனவியல் தொன்மைகளைக் கூறும் நுாலாசிரியர் பெரும்பாலும் திருவள்ளுவரின் மனநலக் குறள்களைக் குறிப்பிடுவது வியக்கத்தக்கது.
நுாலுக்கு வலிமை சேர்க்க, ‘விக்கிபீடியா’ உட்பட பல்வேறு ஆங்கில கருதுகோள்களைக் காட்டியிருப்பது போற்றற்குரியது. படிக்கப் படிக்க மேன்மேலும் சிந்தனையை உந்துவதாக அமைந்த விரிவான ஆய்வு நூல். படிக்கலாம்.
– மெய்ஞானி பிரபாகரபாபு