இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ, நாம் இயற்கையை நேசிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு எதிரான அணுகுமுறைகளை குறைக்க வேண்டும். மனித குலம் மாற வேண்டும்.
ஒரு நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும், மனித சமுதாய நலனுக்கும் மிகையான உயிரினப் பன்மயம் கொண்ட ஒரு சூழ்நிலை அவசியமாகிறது.
மனிதர்களின் செயலால் ஏற்படும் உயிரினப் பன்மயத்தின் இழப்பானது, ஆபத்தானப் பொருளாதார மற்றும் சமுதாய சீர்கேட்டுக்கு அழைத்துச் சென்றுவிடும் என்பதை, பல்வேறு தரவுகள் மூலம் எச்சரிக்கிறார் நுாலாசிரியர்.
காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்களைப் பட்டியலிடும் நுாலாசிரியர், காற்று மாசால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் விளக்கி உள்ளார்.
தண்ணீருக்காக, அடுத்த மாநிலங்களோடு தமிழகம் போராட்டம் நடத்துவது ஒருபுறமிருக்க இங்கேயே அடுத்தடுத்த ஊர்களுக்குள்ளும் குடிநீருக்காகப் போராடும் அபாயம் உள்ளது என அறிவுறுத்துகிறார்.
அழிந்து வரும் நீர்நிலைகளும், ஆக்கிரமிப்புகளும் என்னும் தலைப்பில், 5,500க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் குமரி மாவட்டத்தில் இருந்ததாக விளக்குகிறார்.
பல்வேறு புள்ளி விபரங்களோடு, 100 தலைப்புகளில் தேசிய அளவிலும் உலக அளவிலும் உள்ள சுற்றுச்சூழல் பற்றிய கருத்துக்களைத் தெளிவான எளிய நடையில் தந்துள்ளார்.
நுாலாசிரியரின் அளப்பரிய முயற்சி, இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டுதலாய் அமையும் என்பது திண்ணம்.
– புலவர் சு.மதியழகன்.