புறத்தாக்கங்களால் சமூக உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் கலாசாரப் புரட்சிகள் வெடிக்கின்றன. நசுக்கப்படும் இனத்தின் உரிமைகளைக் காக்க புரட்சியாளர்கள் தோன்றுகின்றனர்.
காலம் காலமாக உலகின் பல்வேறு பரப்பிலும் ஜனநாயகப் புரட்சியோ, சோஷலிஸப் புரட்சியோ ஏதேனும் ஒரு வடிவத்தில் வெடித்து வருகிறது.
மறுக்கப்படுகிற உரிமைகளை புரட்சியால் அடைந்துவிட முடியும் எனும் அசையாத நம்பிக்கை, சமூகத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.
சமூக சமத்துவத்தை அடைவதற்கான முயற்சிகளும், பொருளாதார உயர்வுக்காக கொடுக்கப்படும் குரல்களும், அந்தந்த காலத்து ஆட்சியாளர்களால் முரண்களாகவே பார்க்கப்படுகின்றன. போராடாமல் எதையும் பெற முடியாது எனும் நிலைமையே தொடர்ந்து காணப்படுகிறது.
உலக வரலாற்றில் மிகப்பெரும் கலாசாரப் புரட்சியை, 1966 – 76ல் எதிர்கொண்டது சீன தேசம்.
சீனக் கலாசாரப் புரட்சியின், 10 ஆண்டு காலத்திய ஆய்வுகளும், வரலாற்று ரீதியான விளைவுகளும் அவ்வப்போது நுால் வடிவில் வந்தவண்ணம் உள்ளன. அந்த வரிசையில் கலாசாரப் புரட்சியின் வேர் வரை சென்று, நேரடியாகக் கள ஆய்வு செய்து இந்நுாலை விரிவாகப் படைத்திருக்கிறார் மூலநுாலாசிரியர் டாங்பிங் ஹான்.
புரட்சி நடைபெற்ற ஒரு சீன கிராமத்துக்கே, வாசகரைக் கையைப் பிடித்து இழுத்துச் செல்கிறார்.
மார்க்சீய -லெனினிய சித்தாந்தத்தின் வீச்சு, எளிய வர்க்கத்தினரையும் போராளிகளாக்கும் வல்லமை படைத்ததோடு, ஒவ்வொருவரையும் ஆட்சி நிர்வாகத்தில் அதிகாரம் பெறும் மாற்றத்தை உண்டாக்கியதையும் அறிய முடிகிறது.
இந்நுாலை எளிய நடையில் தமிழாக்கம் செய்திருப்பவர் நிழல்வண்ணன்.
– மெய்ஞானி பிரபாகர பாபு