திருக்குறள் பற்றிய ஒரு விரிவான ஆய்வடங்கலாக இந்நுால் அமைந்துள்ளது. இந்நுாலாசிரியர் தாவரங்கள் குறித்து அரச மரம், பனை மரம், பலா மரம் முதலான பல நுால்களை வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில் திருக்குறளில் இடம்பெற்றுள்ள தாவரங்களை இனங்காட்டுவதாக இந்நுால் உருவாக்கப்பட்டுள்ளது.
நுாலின் முன்பகுதி திருக்குறள் பற்றியும், அது குறித்து வெளிவந்துள்ள இலக்கியச் சான்றாதாரங்கள் குறித்தும் தொகுத்தளித்துள்ளது. இது போன்றே, திருவள்ளுவர் பற்றியும் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, திருக்குறள் மூலமும் – சுருக்கமான உரையும் இடம் பெற்றுள்ளது. இவற்றை அடுத்தே திருக்குறளில் இடம் பெற்றுள்ள தாவரங்கள் பற்றிய பட்டியல் இடம் பெற்றுள்ளது. பின்னர், ஒவ்வொரு தாவரம் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டு, உரிய திருக்குறளும் எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.
திருக்குறளில் இடம் பெற்றுள்ள தாவரங்கள் மட்டும் அல்லாது, தாவரங்களது வளரியல்வு, பாகங்கள் இவை இடம்பெற்றுள்ள திருக்குறள்களும் இனங்காணப்பட்டுள்ளன.
திருக்குறளில் இடம்பெற்றுள்ள உணவு தொடர்பான குறள்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இறுதியாக, திருக்குறள் முதற்குறிப்பு அகரவரிசை அமைந்துள்ளது.
அமை, அனிச்சம், உள்ளி, எள், கரும்பு, காம்பு, குவளை முதலிய, 14 தாவரங்கள் திருக்குறளில் இடம்பெற்றுள்ளதை இந்நுாலின் வழி அறிய முடிகிறது. அத்துடன் தாவரங்களின் பெயரை நேரடியாகக் கூறாது இரு தாவரங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
கனி, கள், நறவு, தளிர், பூ, மடல், அரும்பு, பழம், தோடு, மரம், குழை முதலான தாவரங்களின் பாகங்கள் இடம்பெற்றுள்ள குறள்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு தாவரச் சொல், குறளில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.
எடுத்துக் கொண்ட பொருள் பற்றிய முழுமையான தகவல்களைத் தொகுத்து அளித்துள்ளார் நுாலாசிரியர். திருக்குறள் மூல நுாலுடன், அதைப் பற்றிய விளக்கங்களும், தகவல்களும் அடங்கிய இந்நுால் அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும். தமிழுலகம் இதை நிச்சயம் வரவேற்கும் என்பதில் ஐயமில்லை.
– முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்