நுாலாசிரியர், 120க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியவர்; இலக்கியப் பரிசுகளும் பெற்றவர். இந்த நுால் ஆன்மிகம் என்பதை விட, பக்தி கலாசாரத்தின் முகத்தை பிரதிபலிக்கும் கருத்துக்கள் கொண்டது. தமிழகத்தில், 35 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அது மட்டுமின்றி, ‘எந்நாட்டிற்கும் இறைவனான சிவபெருமானை’ வணங்கிப் போற்றிய பழமையான கோவில்கள், அதன் அமைவிடம், சிறப்புகள் பெருமை மிக்கவை.
இந்நுாலில், 140 கோவில்கள் பற்றிய தகவல் களஞ்சிய தொகுப்பு இடம் பெற்றுள்ளது. பக்தி இலக்கியம் மக்களை மாசற வாழச் செய்தது. அப்பர் உட்பட நால்வர் வழிபட்ட தலங்கள் மிகச்சிறப்பு பெற்றவை.
இந்நுாலில், ‘திருப்பாசூர்’ அல்லது ‘திருப்பாச்சூர்’ என்ற தலத்தை, 16வது வரிசையில் காணலாம். கரிகாலன் கட்டிய கோவிலின் பின்புலத் தகவல் சிறப்பானது.
அம்பாளை, ‘தங்காதலி’ – தன்னுடைய காதலி என்று இறைவன் அழைத்த பெருமை உள்ள ஊர். ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரமும் உள்ள கோவில்.
பக்தி இலக்கியம் மட்டும் அல்ல, சிவ நெறி தழைக்க உதவிடும் ஆசிரியர் முயற்சி பாராட்டுக்குரியது.
–எம்.ஆர்.ஆர்.,