நீண்டதாகப் பலரும் கருதும் இந்த வாழ்க்கை உண்மையில் மிகவும் சிறியது. கண் மூடி இமைப்பதற்குள் காலம் பறந்து விடுகிறது. இதை உணர்ந்தோர் வாழ்க்கையில் எதையேனும் சாதிக்க வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
பலர் இலக்குகள் இன்றி, கிடைத்த வாழ்க்கையில் சமரசமாகி நீர்த்து விடுகின்றனர். வாழ்க்கையின் இடையில் வரும் ஒவ்வொரு சவாலான கட்டத்திலும் வெல்வதற்கு முயல்வதே ஊக்கமுள்ளோரின் இலக்கு.
எங்கும் எதிலும் எப்போதுமே நேர்மையோடு முதன்மையாக நிற்க விரும்புவதே, சிறந்த வெற்றியாளருக்கான அடிப்படை இயல்பு. உயர்ந்த நோக்கமும், மன உறுதியும் ஒருவருக்கு ஆளுமையைக் கூட்டுகின்றன.
தனிமனிதர்கள் தம்மை மெருகேற்றி வெல்லவும். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தம் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும், மனதுக்கு உரமேற்றிக் கொள்வதற்கான வழிமுறைகளை எளிய நடையில் வழங்கியிருக்கிறார் நுாலாசிரியர் தேவநாதன்.
நிர்வாகப் பொறுப்பில், தன்னம்பிக்கை, நேர்மறைத் தன்மை, நம்பகத் தன்மை போன்றவை நுாலின் பல்வேறு அத்தியாயங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன. வாழ்வில் வாய்ப்புகளை உருவாக்கி, திட்டமிட்டு உழைத்துப் போராடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம் என, இளைஞர்களுக்கு ஆர்வமூட்டுவதாக உள்ளது இந்நுால்.
– மெய்ஞானி பிரபாகரபாபு