குமரகுருபரர் அருளிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் சொற்சுவை, பொருட்சுவை, கற்பனை, வருணனை கொண்ட சிற்றிலக்கியமாகும். ஏனைய பிள்ளைத் தமிழ் நுால்களை விட, இது பலராலும் போற்றப்படும் சிறப்பிற்குரியது.
இதற்கு, இந்நுாலாசிரியர் பழனிசாமி மிக எளிமையாகவும், தெளிவாகவும் பொருள் விளங்கக்கூடிய வகையில் உரை எழுதியுள்ளார். மேலோட்டமாகப் பொருள் கூறாமல், தாம் தமிழ்ச் சுவையில் கரைந்து உரை வரைந்துள்ளார்.
‘பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப்பசுங் கொண்டலே’ என்ற அடிகளுக்கு, எளிய முறையில் விளக்கம் தந்துள்ளமை பாராட்டுக்குரியது.
குமரகுருபரர் கற்பனையும், வருணனையும் கலந்து பாடியுள்ள இடங்களை அழகுற விளக்கிச் செல்கிறார். தேவையான இடத்தில் சுருக்கமாகவும், சிறு சிறு வாக்கியங்களில் தம் நடைத்திறத்தைக் காட்டியுள்ளதோடு, தெளிவுபடுத்த வேண்டிய இடத்து விளக்கமாகவும் எழுதியுள்ளமை போற்றற்குரியது.
பிள்ளைத்தமிழில் அம்புலிப் பருவத்திற்கு தனி சிறப்புண்டு. சாம, பேத, தான, தண்டத்தில் நிலவோடு அம்மையையும் நிலவையும் ஒப்பும் உறழ்வும் பட, எடுத்துக்காட்டி அவற்றைத் தெளிவுற விளக்கியுள்ளார். பக்தியில் நாட்டம் கொண்ட அனைவரும் படித்துப் பயன் பெறத்தக்கதாய் இந்நுால் விளங்கும்.
– ராம.குருநாதன்