உலகிற்கே ஒரு மந்திரம் திருமந்திரம். மந்திரத்திற்குரியது சமஸ்கிருதம் மட்டுமே எனும் கூற்றைப் பொய்யாக்கிய ஒரே மந்திரம், திருமூலர் இயற்றிய திருமந்திரம். திருக்குறளும், திருமந்திரமும், திருவாசகமும் தமிழின் ஞானக்கருவூலங்கள். புலமைக் கடலாகவும், சாத்திர ஞானச்செறிவு உடையவராகவும் திகழ்ந்த பாலுார் கண்ணப்ப முதலியார், இந்நுாலுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார்.
சைவப்பெரியார்கள் வகுத்தவாறு, 10ம் திருமுறையாகத் திகழும் திருமந்திர நுாலில் உள்ள, 304 திருமந்திரங்களும், திருமூலர் பாடியதாகக் கருதப்படும் வயித்தியப் பகுதி நுாலிலிருந்து, 25 மந்திரங்களும் விளக்கத்துடன் இந்நுாலில் காணப்படுகின்றன. ‘நிறைமொழி மாந்தர் ஆணையில் பிறந்த, மறைமொழி தானே மந்திரம் என்ப’ எனும், தொல்காப்பியர் வாக்கின் வண்ணம் திருமந்திரம் மறை – மந்திர நுாலேயாகும்.
திருமூலரே தம் திருவாக்கில், ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறே’ என்ற பாடலில், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே இறைவன் தன்னைப் படைத்தனன் எனில், சங்கப் புலவர் முதல், அவர் காலம் வரை வாழ்ந்த புலவர்கள் தமிழ் இயற்றவில்லையா? காப்பியம் படைக்கவில்லையா? பனுவல் இசைக்கவில்லையா எனில், நிரம்பப் படைத்தனர்.
திருமூலர் என்னும் சித்தர், 3,000 ஆண்டுகள் வாழ்ந்து ஆண்டிற்கொன்றாக, 3,000 மந்திரங்களை அருளிச் செய்தார் என்றும், அவை திருமந்திரமாலை என வழங்கப்பட்டு, சைவத் திருமறைகளுள் ஒன்றாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் வேதமுடைத்து, மந்திரமுடைத்து ஆதலின் அர்ச்சனைகள் தமிழிலே அமைந்தன. இறைவன் சிவனே, அர்ச்சனை பாட்டேயாகும்; ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுகின்றார் துாமறை பாடும்வாயர் எனச் சேக்கிழார் வரைந்துள்ளார்.
கோவில்களில் பல்லவர் காலத்தில் தான் வடமொழி மந்திரங்களை கொண்டு அர்ச்சித்தல் வழக்கத்திற்கு வந்தது. தமிழ் மந்திரங்களின் பெருமை, ஆழம் அறியத் திருமந்திரம் ஒன்றே போதும். திருமந்திரத்தில் சமுதாய மேம்பாட்டுணர்வும் இயைந்து நிற்கிறது. கள் குடித்து மயக்கம் கொண்டு திரிபவரைத் தண்டித்தல் மன்னன் கடமையாகும் என அறிவுறுத்துகிறது.
சைவப் பெருமக்கள் அன்றி எச்சமயத்தவரும் ஏற்று வணங்கத்தக்க வாழ்வியல் நெறிகள் கொண்ட பெரும்புலவர் பாலுார் கண்ணப்பன் முதலியார் விளக்கவுரையுடன் கூடிய இந்நுால் அனைவரும் படிக்கத்தக்கது; படித்தால் வாழ்வில் ஒழுக்கமும், அறிவும் ஓங்கும்.
– கவிக்கோ ஞானச்செல்வன்.