திருக்குறளில், அரசியல், பொருளியல், சமயம், மெய்ப்பொருளியல், அளவையியல், மருத்துவ இயல், உளவியல், உழவியல் முதலான பல்துறைப் புலமைக் கூறுகளையும் திருவள்ளுவர் பதிவு செய்துள்ளார்.
ஆன்மிகம் என்பதை நடுநிலையோடு விளக்கி, உளவியல் என்ற அறிவியல் சார்ந்த அனுபவத்தோடு ஆன்மிக உளவியல் நோக்கில் உரை கண்டுள்ளார், நுாலாசிரியர்.
சில குறட்பாக்களுக்கு, தான் கருதும் மாற்றுப் பொருளையும் வழங்கி, பின் ஆன்மிகம் சார்ந்த உளவியல் உரையை ஆய்வுரையாகத் தந்துள்ளார். ‘ஆன்மா’ என்னும் சொல்லை வள்ளுவர் பயன்படுத்தாவிடினும் உள்ளுறையாக பல இடங்களில், பதிவு செய்துள்ளார் என கூறும் நுாலாசிரியர், அன்புடைமை பற்றி கூறும்போது, உடம்பின் மூலம் தான் அன்பை செலுத்தவும், அடையவும் முடியும்.
அவ்வாறு கொண்டும், கொடுத்தும் வாழும் போது தான் ஆன்மா முதிர்ச்சியுற்று வீடு பேறு அடைய முடியும் என கூறுகிறார்.
உடல், பொருள், ஆன்மா ஆகிய மூன்றையும் உணர்வுப்பூர்வமாக உட்படுத்தி, பிறர் ஆலோசனையின் பேரில் அல்லாமல், தன்னுடைய ஆன்மாவுக்கு உவக்கும் செயலை சுதந்திரமாக தன்னுடைய உடைமையாகவே கருதி மேற்கொள்வதே, ஆள்வினையுடைமை என கூறும் விளக்கம், சிந்தையைத் துாண்டக் கூடியது.
ஒப்புரவு, ஈகையால் வருவதே புகழ்; தாளாண்மை, மேலாண்மை சொற்களின் நுட்பம்; ‘கண்ணோட்டத்திற்கு’ கூறும் விளக்கம் Empathy - Sympathy சொற்களின் நுட்பமான வேறுபாடு போன்றனவும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் மற்றும் செயல் இந்நான்கும் அறவே அகன்றிருத்தலும், அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகிய ஐந்து பண்புகள் முதிர்ந்திருத்தலும், இவையே திருக்குறளின் மையக் கருத்து என நுாலாசிரியர் கூறுவதும், படித்து இன்புறத்தக்கன.
‘திருக்குறளுக்கு ஆன்மிக உளவியல் நோக்கில் உரை’ என்னும் இப்புதிய முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் நுாலாசிரியர்.
– புலவர் சு.மதியழகன்