சங்க இலக்கியத்தின் சில பகுதிகளை மட்டும் புதிய உரைநடைக் கவிதையாகச் சிலர் வெளியிட்டுள்ளனர். இந்நுாலாசிரியர் பிரபாகர பாபு தன் வாழ்நாள் சாதனையாக, பத்துப் பாட்டு, குறுந்தொகை, முத்தொள்ளா யிரம், ஐங்குறுநுாறு, திருக்குறள் ஆகியவற்றுக்கு புதிய வடிவில் வார்ப்புரை எழுதுவதை தொடர்ந்து செய்து வருவது பாராட்டுக்குரியது.
எளிமை கோலம் பூண்டு, கற்பார் உள்ளத்தில் களிநடம் புரியும் வண்ணம், நற்றிணை முழுவதற்கும் வார்ப்புரை எழுதி இருப்பதை வரவேற்கலாம்.
ஒவ்வொரு பாடலுக்கும் கீழே கூற்று, கூற்று விளக்கம், அருஞ்சொற்பொருள், உள்ளுறை, இறைச்சி முதலானவற்றை தந்திருப்பது, நுாலாசிரியர் சங்க இலக்கியத்தில் பெரும் ஈர்ப்புடையவர் என்பதை காட்டுகிறது.
‘நின்ற சொல்லர் நீடுதோன்றினியர்’ என்ற முதல் பாடலின் கருத்தை உள்வாங்கி, மூல நுாலின் சுவை கெடாமல் தந்திருப்பது பாராட்டுக்குரியது.
வார்ப்புக் கவிதைகள் யாவும் இயல்பான ஓட்டத்தில் பொருள் எளிதில் புரியுமாறு அமைந்திருப்பதை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
‘விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி’ என்று வரும் பாடலை, நாடகப் பாணியில் காட்சியாக வடித்துள்ளது போற்றுதலுக்குரியது.
‘மயிலடி அனைய மாக்குரல் நொச்சி’ என்று வரும், ௩௦௫ம் பாடலில், ‘மயில் பாதம் போன்ற நொச்சி இலை’ என்று எழுதியிருப்பதில், பாதம் என்பதற்குப் பதிலாக காலடி என்று எழுதியிருப்பின் இன்னும் இனிதாய் இருக்கும்.
பிரபாகர பாபு ஒரு தமிழ் நயம் அறிந்தவர் என்பதை அவரது வார்த்தைகள் காட்டுகின்றன. சங்க இலக்கிய அன்பர்கள் போற்றி மகிழும்படியான நுால்.
– ராம.குருநாதன்