விவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப் பாடல்களும் வாழ்வில் வெற்றி பெற விவேகம் வேண்டும். விவேக சிந்தாமணி, 135 பாடல்களைக் கொண்டது; வாழ்வியல் அறங்களை உணர்த்துகிறது.
முன்னோர் மொழிப் பொருளைப் பொன்னே போல் போற்றுவோம் என்பதற்கிணங்க, நீதி நுால்களின் கருத்துகளைத் தழுவி உள்ளது.
பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளுக்கு, விவேக சிந்தாமணியில் உள்ள பாடல்கள் பெரிதும் துணை புரியும். ஆபத்து வேளையில் உதவாத பிள்ளை, மிக்க பசிக்கு உதவாத உணவு, தாகத்தைத் தீர்க்காத தண்ணீர், வரவுக்கு மேல் செலவு செய்யும் மனைவி, கோபத்தை அடக்காத அரசன், ஆசிரியரிடம் கீழ்ப்படியாத, குருவின் வார்த்தைகளைப் பின்பற்றாத மாணவன் இவை ஏழும் பயனற்றவை (பக்., 26). பொய் சாட்சி சொன்னால் என்ன நேரும் என்பதை இந்த நுால் பேசுகிறது.
இரப்பவருக்கு ஈயாக் கைகள், இனிய சொல் கேட்காத காதுகள் இருந்து என்ன பயன் என வினவுகிறது. பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை. இன்பம், புண்ணியம், கீர்த்தி, இவை யாவும் இல்லை என்ற கருத்தமைந்த பாடல் உலகியலை அறிவுறுத்துகிறது.
ஆசாரம் செய்வாராகில் அறிவோடு புகழும் உண்டாகும். துாக்கணங் குருவி, குரங்கிற்குச் சொன்ன அறிவுரையால் அவதிப்பட்ட கருத்தை, ஈனருக்கு அறிவுரை வழங்குவதைக் குறிக்கிறது. அர்ப்பரைச் சேர்ந்தோர் வாழ்வது அரிதாகும்.
சிறந்த சமுதாயம் அமைந்திட, விவேக சிந்தாமணியின் பாடல்கள் பெரிதும் துணை புரியும் என்பதை நுால் விளக்குகிறது.
– பேராசிரியர் இரா.நாராயணன்