மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களால் கூறப்பட்ட நாலாயிரம் பாசுரங்களுக்கும் உரை எழுதுவது என்பது மிகப்பெரிய சாதனையாகும்.
இன்றைய மக்கள் எளிதில் படித்து மகிழும் வண்ணம், பழகு தமிழில் உரை எழுதியுள்ளார் பழனியப்பன்.
பெரியவாச்சான் பிள்ளை நாலாயிரத்திற்கு முன்பு உரை எழுதியிருந்தாலும், அவை மணிப்பிரவாள நடையில் (வடமொழியுடன்கூடிய தமிழ்ச்சொற்கள்) இருப்பதால், இக்காலத்தவர் படிக்கையில், அயர்ச்சியே ஏற்படும். அதைத் தவிர்க்க இப்பெரும் முயற்சி எனலாம்.
‘சொட்டுச்சொட்டென்ன’ என்ற சொல்லுக்கு, ‘வியர்வைத்துளி’ என்று புதுப்பொருள் கூறுவதும், ‘பத்திரம்’ என்ற சொல்லிற்கு, ‘உடைவாள்’ என்று பொருள் கூறுவதும், ‘பூணி’ என்ற சொல் நமக்குப் புதிது என்று கூறுவதும், குலசேகர ஆழ்வாரின் ஐந்தாம் திருமொழியை நவவித சம்பந்தங்களுடன் விளக்குவதும், அவற்றில் சில நம்மாழ்வார் பாசுரத்தில், ‘நாரணன்’ என்ற சொல் வருமிடத்தில், (பாசுரம் 3,239), ராமன் பட்ட துயரங்களை அழகாகப் பட்டியலிடுவதும், நுாலாசிரியரின் நுட்பமான அறிவுத் திறனையும், ஆய்வுத் தன்மையையும் கண்டு பாராட்டலாம்.
இந்நுாலில், திருக்குறள், கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், ராம நாடகக் கீர்த்தனை, பாரதியார் பாடல்கள் எனப் பல நுால்களின் ஒப்பீடுகளும் படிப்போருக்கு இன்பம் பயக்கும்.
டாக்டர் அவ்வை நடராசன், சுகி சிவம், தி.ராசகோபாலன், உ.வே.தேவராஜன் சுவாமி உட்பட பல தமிழறிஞர்களின் வாழ்த்துரைகளும், அணிந்துரைகளும் இந்நுாலிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன.
– பேராசிரியர் கலியன் சம்பத்து