‘சீர் சுமக்கும் சிறகுகள்’ என்ற தலைப்பில், மாத இதழில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து, ‘இரக்கம் கொள்வோம் விட்டுக் கொடுப்போம்’ என்ற தலைப்பில் வந்திருக்கிறது புத்தகம். மனம் பண்படுவதற்கு வழிவகை செய்யும் முறையில், 48 உள்தலைப்புகளில் அடுக்கப்பட்டிருக்கிறது கட்டுரைகள்.
‘வாழ்க்கை நெறிக் கல்வி’ என்ற தலைப்பில், வகுப்பில் மாணவர்களுக்கு நன்னெறி, தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலான உயர் எண்ணங்களைப் பேசுவதற்காக சேகரித்த சிறு சிறு குறிப்புகளை சற்று விரிவாக்கி, கட்டுரையாக்கிய சூட்சுமத்தையும் தெளிவுபடுத்தி இருக்கிறார் ஆசிரியர்.
கட்டுரைகள் ஒவ்வொன்றும் தன்னம்பிக்கையை ஊற்றெடுக்க வைக்கின்றன. கட்டுரைகளில், திருக்குறள் பல இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. அதுவே, ஆசிரியர் வள்ளுவத்தில் எவ்வளவு ஆழ்ந்தவர் என்பதை சுட்டிக் காட்டுகிறது.
பெரும்பாலான கட்டுரைகளில் ஓர் உள்ளார்த்தமான நிகழ்வைவோ, உயிரோட்டமான கதையையோ தொடக்கமாக்கிச் செல்கிறார். இதனாலேயே, கருத்துகள் மனதில் பதியமிடுகிறது.
உதாரணமாக, பொறுமையை விளக்கும் நிகழ்வில், ஏசுநாதர் மீது, 108 முறை வெற்றிலை எச்சிலை துப்பியபோதும், அதை அவர் பொறுமையுடம் ஏற்றுக்கொண்டார் என்பதை குறிப்பிடுவது படிமமாய் படிகிறது.
கட்டுரைகளின் தலைப்புகள் அனைத்தும், ‘வோம்… போம்...’ என்று முடிவது, கட்டுரைகளுக்கு ஒரு கவிதைத் தன்மையை ஏற்படுத்தித் தருகிறது.
– ஸ்ரீநிவாஸ் பிரபு