இந்த மலரின் முன்னுரையில், அசல் மலர்களின் வாசனையை அள்ளி வீசாது, மாறாக ஆண்டு முழுவதும் கற்றுக் கொண்டு ஞானம் பெற உதவும் என்று அதன் ஆசிரியர் கூறி, சற்று புதிய சிந்தனையை வைத்துஇருக்கிறார்.
எடுத்த எடுப்பிலேயே, 1947 ஆகஸ்டு, 15 சுதந்திரம் பெற்ற நாளில், நவகாளி யாத்திரையை மேற்கொண்ட அவர், அந்த நாள் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, ‘சொல்வதற்கு ஒன்றும் இல்லை’ என்ற பதில் இன்றும், நாளையும் அர்த்தமுள்ளதாக வாசகர்கள் உணரலாம்.
அருட்செல்வர் மகாலிங்கம் கருத்தாக வந்த கட்டுரையில், ‘சுதந்திரம் அடைந்த ஒரு தேசம் செய்ய வேண்டிய முதல் பணி, சுயமரியாதை உள்ள வரலாற்றை உருவாக்குவது தான்’ என்றும், ‘இந்திய மயம்’ என்று குறிப்பிட்டிருப்பது இன்று பேசப்படும் பொருளாக வந்திருக்கிறது.
திருநாவுக்கரசர், ‘வாகீசர்’ என்ற நாமம் பெற்றவர். அவர் தன் சமண மதத்தில் இருந்த போது, ‘தருமசேனன்’ என்ற பெயர் உறுத்தியது என்றும், அதனால் அவருக்கு சிவபெருமான் அருளிய செயலை, ‘யாதும் சுவடுபடாமல்’ என்ற நயத்தகு கட்டுரையில் காணலாம்.
ஒரு பத்திரிகையாளரின் கொலை, எம்.கே.டி.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை படுகுழியில் தள்ளியது குறித்த ஆவணக் கட்டுரை, பொன்னீலன், மாத்தாளை சோமு, கி.ரா., போன்ற சிறந்த படைப்பாளிகள் பலரது கருத்துக் கருவூலங்கள் உள்ள மலர். மலர் சிந்தனைக்கு விருந்தாக உள்ளன.