பண்டுவம் எனும் சித்த மருத்துவம் பார்க்கும், நாவிதர்களின் சமூக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாவல், சுளுந்தீ. இது, ஒரு மரத்தின் பெயர்; இதை, தீக்குச்சியாகவும் எரிபொருளாகவும் பயன்படுத்துவர்.
ஆசிரியர் இதை வழிகாட்டும் வெளிச்சமாகவும், ஆதிக்க உணர்வுக்கு எதிராக வினை புரியும் எரி நெருப்பாகவும், ஒடுக்கப்பட்டோரின் வாழ்விற்குரிய போர் ஆயுதமாகவும் உணரக் கூடிய வகையில், ஒரு குறியீட்டு நாவலாக அமைத்துள்ளார். இதை, ஒரு தொல்குடி சமூகத்தின் ஆவணமாக கருதலாம்.
தொன்மை அடையாளத்தின் பண்பாட்டையும், குறிப்பிட்டதொரு சமூகத்தின் மாற்றத்தையும் இந்நாவல் காட்டுகிறது.
விஜய நகர, நாயக்க, இஸ்லாமிய மற்றும் ஆங்கில ஆட்சி காலங்களில் நிகழ்ந்த செய்திகளூடே கதைப் பின்னல் செல்கிறது. கடை நடக்கும் காலமான, 18ம் நுாற்றாண்டின் கால கட்டத்தில், நாவிதர் இனம் எப்படிப்பட்ட எதிர்நிலையை எதிர்கொண்டது என்பதை விவரிக்கிறது.
ஒரு குறிப்பிட்ட ஜாதி கீழிறக்கம் செய்யப்பட்டதன் வலியின் அரசியலை ஆழமாக சித்தரிக்கிறது. கன்னிவாடி அரண்மனையை நிகழ்களமாக கொண்டிருந்தாலும், பண்ணை காடு, பன்றி மலை, வேடசந்துார், பழநி முதலிய பகுதிகளையும், அங்கு நிலவிய சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களை இந்நாவலில் காணலாம்.
ஒடுக்கப்பட்ட குலத்தின் பிரதிநிதியாக விளங்கும் ராமன், தன்னை சகலகலா வல்லவனாக ஆக்கிக் கொண்டு, ஆதிக்க உணர்வுக்கு எதிராக கலகக்குரல் எழுப்பும் மாடன், சொந்த மண்ணில் வாழ இயலாதபடி குலநீக்கம் செய்யப்படும் மருதமுத்து ஆச்சாரி மற்றும் சென்னியப்பன் நாயக்கன், செவத்தப்ப நாயக்கன், விரப்பாட்சி அரண்மனையார், அரண்மனை குலகுரு முதலியோர் அசலான பாத்திரங்களாக வருகின்றனர்.
நாவல் யதார்த்தமான கதையோட்டத்தாலும், பாத்திர வார்ப்பாலும் சிறக்கிறது. தேவதானப்பட்டி செப்பேடு வழி சமூகச்சிக்கல் அலசப்படுதல், குதிரையையும், பெண்ணையும் ஒப்பிட்டு மரக்காயர் பேசுவது முதலியன வித்தியாச பாணியில் இந்நாவலில் சொல்லப்பட்டு உள்ளன.
தமிழ் நாவல் வரலாற்றில், இனவரைவியல் நாவல் என்ற வகையில், இந்த நுாலுக்கு சிறப்பான இடம் உண்டு.
– பேராசிரியர் ராமகுருநாதன்