‘என்று பிறந்தனள் இவள்?’ என அனைவரும் வியக்குமாறு விளங்கும் தமிழின் தொன்மை முதல் இன்றைய வளர்ச்சி வரையிலான ஒரு நீண்ட வரலாற்றுப் பாதையில் பயணிக்கிறது, இந்நுால். தனித்தனியான இருபத்து மூன்று கட்டுரைகளைக் கொண்டிருந்தாலும், மொழியின் வளர்ச்சிப் பாதையில் இவை அமைக்கப்பட்டுள்ளதால் தமிழின் இனிமை மிகுதிப்படுகிறது.
தமிழின் சொல்வளத்தை அறியச் செய்யும் நிகண்டுகளில் இந்நுால் தொடங்குகிறது. நிகண்டுகளின் வரலாற்றையும் சிந்தாமணி நிகண்டு, ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு பற்றியும் இந்நுால் வழி அறியமுடிகிறது. மேலும், ஈழக் கடற்கரையைச் சார்ந்த மக்களைக் குறிக்கும், நீரரர் என்னும் பெயரிலான நிகண்டு பற்றியும் தெரியவருகிறது.
சங்க கால மக்களது வணிகம், சிலம்பின் பாடல் வடிவங்கள், கவிதை நுாலாய்வு, இராஜம் கிருஷ்ணனின் படைப்புகள், நீர் மேலாண்மை, இன்றைய அரசியல் நிலை, இன்றைய கல்வி முறை, இவற்றோடு கணினித் தமிழ், கணினிவழி நுாலடைவு உருவாக்கம் எனப் பல கருத்துக்களின் குவியலாக இந்நுால் விளங்குகிறது.
‘பன்னிரு கரத்தோனின் பேராண்மை’ என்னும் கட்டுரை முருகப் பெருமானின் பன்னிரு கரங்கள் குறித்த விளக்கங்களை அள்ளித் தருவதாக அமைந்துள்ளது. வணிகம் சார்ந்த கட்டுரையின் வழி, நம் மக்களது பண்பாட்டு முறைமைகளையும், நாகரிக வளர்ச்சியையும் அறிய முடிகிறது.
சிலம்பின் வரிப்பாடல்கள் அக்கால மக்கள் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருப்பதை சிலப்பதிகாரக் கட்டுரை எடுத்துக் கூறுகிறது. மழலையரது அறிவாற்றலை வளர்த்தெடுக்கும் வகையில், கற்பித்தல் தொடர்பான சிந்தனைகளை முன்வைத்து அமைந்துள்ள கட்டுரை தமிழ் பேசும் அடுத்த தலைமுறையினருக்கான அச்சாரமாக விளங்குகிறது.
இந்தியப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கையின் நிலை குறித்து விளக்கும் வகையில், ‘தணிப்பரிதாம் துன்பமிது’ என்னும் கட்டுரை அமைந்துள்ளது. ஆக, தொன்மையின் சிறப்போடு, இன்றைய நிலையையும், வளர்ச்சியையும் இந்நுால் பதிவு செய்துள்ளது. நுாலாசிரியர் தமிழோடு பயணித்த பாதையைக் காட்டும் இந்நுால், நம்மையும் அவரோடு களைப்பின்றி பயணிக்கச் செய்கிறது. தமிழுலகம் கன்னித் தமிழைக் கனிவோடு ஏற்கும் என்பதில் ஐயமில்லை.
– முனைவர் கி. துர்காதேவி