எல்லாருடைய வாழ்க்கையிலும் நிகழ்வுகள் அனுபவங்களாய் இருந்து கொண்டே இருக்கிறது.
நிகழ்வுகளின் மொத்தத் தொகுப்பான வாழ்க்கையில் செய்வதற்கு உரிய செயல்களைச் செய்வது மனிதப் பண்பு, செய்வதற்கு அரிய செயல்களைச் செய்வது இறைப் பண்பு. அப்படி இயங்கும் உலகில் அரிய மனிதர்களின் உயரிய பண்புகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது இந்த நுால்.
சென்னை மாகாண முதல்வர் ஓமந்துாரார், சாலையோர புளிய மரங்களுக்கு எண் கொடுத்து அதன் மூலம் அரசுக்கு வருவாய் ஏற்படுத்தித்தந்த நிகழ்வு, எம்.கே.தியாகராஜ பாகவதரின் பெருந்தன்மையான நிகழ்வு, ஜி.டி.நாயுடுவின் கண்டிப்பு, கண்ணீரைத் துடைத்த காமராசரின் கருணை, நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் உருவான விதம், திருநெல்வேலி – பாளையம்கோட்டை இடையே தாமிரபரணி ஆற்றின் மீது கட்டப்பட்ட சுலோச்சனா முதலியார் பாலம் உருவான வரலாற்று நிகழ்வு, விற்பனைக்கு வந்த முதல் நாளே, 10 ஆயிரம் பால்பாயின்ட் பேனாக்கள் விற்றுப்போன நிகழ்வு... என்று அடுக்கடுக்காய் பல்வேறு வகைகளில், 200 நிகழ்வுகளை எளிய நடையில் காட்டியிருக்கிறார் நுாலாசிரியர்.
இவற்றில் சில நிகழ்வுகள் நெஞ்சில் குறிக்கோளைப் பதிய வைக்கின்றன. எப்படியும் வாழலாம் என மனம் போனபடி வாழ நினைப்பவர்களுக்கு, இப்படித்தான் வாழ வேண்டும் என்னும் கொள்கையை உருவாக்கிக் கொள்ள, பண்புடன் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை சிறப்பாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
கல்வெட்டில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களாய் சமுதாயத்தை நெறிப்படுத்தும் தகவல்கள்.