அறிவு மட்டுமே ஒருவரை மேன்மையானவர் ஆக்கி விட முடியுமா?
முடியாது என்கிறார் ஆசிரியர்.
மெத்த படித்தவராக, உலகே வியக்கும் தலைவராக ஒருவர் திகழ்ந்தாலும், இவ்வுலகில் யாராவது ஒருவருக்குக் கூட அவர் பகைவராகத் தென்பட்டால் அல்லது நடந்து கொண்டால், அவர் மேன்மையானவர் என்ற சொல்லுக்கு உகந்தவர் அல்ல.
கோபம், அகந்தை, சோம்பல், வெறுப்பு, பிறழ்ந்து பேசுதல் ஆகியவை மனித இயல்பு என கருதினாலும், அவை தான் ஒருவரை பண்பட அல்லது மேன்மையடையச் செய்ய முடியாத தடைக் கற்களாக உள்ளன என்பதை, குரு – சீடர் சம்பாஷணை மூலம், விளக்குகிறார் ஆசிரியர்.
எல்லாருமே, அவரவர் உள்ளுணர்வை, தன் நண்பனாகக் கருதி பேச வேண்டும். உள்ளுணர்வு சொல்வதை, மனமோ, மூளையோ கேட்கத் தவறும் நேரத்தில், வார்த்தைகளில் பொய் பிறக்கிறது.
பொய் பேசுவது, முழுக்க முழுக்க நம்மை நாமே தற்காத்துக் கொள்ளத் தான் என்றாலும், இறுதி மூச்சு வரை, பொய்யிலேயே வாழ்ந்து விட வேண்டுமா... அப்படியெனில், மனிதன் தான் உண்மையான விலங்கு; காட்டில் வாழும் விலங்குகள் பொய்யாக நடந்து கொள்ளாது என்பது, ஆசிரியரின் கருத்து.
இயற்கையை எண்ணிப் பார்த்து, அது கற்றுத் தரும் பாடத்தை நம் வாழ்க்கையில் பிரயோகித்தால், இறுதியில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு மட்டுமே எப்பேற்பட்ட பிரச்னையையும் தீர்க்கும் என்பது விளங்கும்.
அன்பு செய்யக் கற்றுக் கொள்வது அவ்வளவு எளிதல்ல; கோபமும், ஆத்திரமும், ‘நான் தான் அறிவாளி’ என்ற எண்ணமும், பிறர் மீது அன்பு செலுத்த விடாது.
எல்லாவற்றையும் தாண்டி, ‘நாம் ஜடம்’ என்ற நிலையை எய்தும்போது, மனதில் எந்த, ‘ரிசர்வேஷனும்’ இல்லாமல், அன்பு பெருக்கோடும்; ‘என்னை முட்டாளாக இருக்கச் சொல்கிறாயா...’ எனக் கூட நீங்கள் கேட்கலாம். இருந்து பாருங்களேன்; ஆசிரியர் எழுதியுள்ள புத்தகத்தைப் படித்ததன் பலன் புரியும்!
– மீனா குமாரி