இதழியல் துறையில் புதிதாக ஒரு புயல் வீசிக் கொண்டிருக்கிறது. ‘மொஜோ’ என அழைக்கப்படும், மொபைல் ஜர்னலிசம், இத்துறையில் ஒரு புதிய வாசலை திறந்து வைத்திருக்கிறது.
அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பங்களை தன் வளர்ச்சிக்கு உதவும் வகையில் வளைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது இதழியல் துறை. இப்போது அந்த வரிசையில், செல்பேசியையும் இத்துறை சேர்த்துக் கொண்டுள்ளது.
நம் நாட்டில், செல்பேசி இதழியல் இப்போது தான் முதல் அடி எடுத்து வைக்க துவங்கியிருக்கும் நிலையில், செல்பேசியை இதழியல் துறை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்; செல்பேசி உபயோகிப்பாளர்கள் எப்படி இதழியலுக்கு பங்காற்றலாம் என்பது குறித்து, மிக விரிவாக விளக்கும் வகையில், தமிழில் வந்திருக்கும் முதல் புத்தகம் இது.
எடுத்துக் கொண்டதை சுவாரஸ்யம் குறையாமல் சொல்ல, ஒரு லாவகம் தேவை. அதை இந்த நுாலாசிரியர் குறிப்பிட்டாலும், வளர்ந்த தொழில் நுட்பம் என்பதை சரியான புரிதலுடன் இத்துறை செய்யுமா என்பதையும் முடிந்த முடிவாக குறிப்பிடாதது நல்ல யுக்தி.
இதழியல் துறையில், 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் என்பதால், இதழியலைத் தாண்டி அடுத்த பரிணாம வளர்ச்சி பற்றி பேசும் தமிழ் நுாலைப் படைத்திருப்பது நல்ல முயற்சியாகும்.
நுாலின் கடைசிப் பகுதியில், செல்பேசி குறித்து அறிய பல ஆதார தளங்களையும், இந்த நுாலிற்கான ஆதாரங்களை கையாண்ட விஷயங்களையும் இணைப்புகள் பகுதியில் சேர்த்திருப்பதும் வரவேற்கத்தக்கது.