தற்கால துப்பறியும் நாவலாசிரியர்களுக்கு முன்னோடியாகத் துப்பறியும் நாவல்களில் ஒரு புதுமையையும், விறுவிறுப்பான நடையையும் புகுத்தி ஏராளமான நாவல்களைப் படைத்த பெருமை. தமிழ்வாணனுக்கே உண்டு. அதிலும், ‘சங்கர்லால்’ என்ற பெயர் அவர் மூலமே பிரபலமானது.
இந்நுாலில், ‘கடலில் மர்மம், சிம்லாவில் கண்ட அழகி, இருள், கைதி நம்பர் 811’ ஆகிய நான்கு வித்தியாசமான மர்மக் கதைகள் உள்ளன. கப்பலில் கடத்தப்பட்ட தங்கக் கட்டிகளைக் கண்டுபிடிக்கும் துப்பறியும் போலீஸ் சுந்தரேசன் மூலம் கப்பல் பற்றிய தகவல்களை எழுதியிருப்பது,
தமிழ்வாணனுடைய எழுத்துத் திறமைக்கு எடுத்துக்காட்டு.நம்பிக்கை துரோகியை நம்புவதும், நல்லவனை சந்தேகப்படுவதுமான எதார்த்தம், ‘கைதி நம்பர் 811’ புலப்படுத்துகிறது. சிம்லாவைக் கண் முன் நிறுத்தும் அழகிய நடை, ‘சிம்லாவில் கண்ட அழகி’ இப்படிப்பட்ட நாவல்களில் தமிழ்வாணன் பாத்திரங்களுக்கு இட்டுள்ள பெயர்களும் புதுமை.
படிக்கும் பழக்கம் குறைந்து வரும் இந்நாளில் இப்படிப்பட்ட நாவல்களைப் படித்தால், நடையழகும் விறுவிறுப்பும், வாசிப்பின் மீது நாட்டம் ஏற்பட வாய்ப்புண்டு. நல்ல பொழுதுபோக்கு அம்சங்களும் உண்டு.
– பின்னலுாரான்