சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய, 64 திருவிளையாடல்களை எளிய உரைநடையில் எல்லாரும் படித்து இன்புறும் வகையில் எழுதி உள்ளார், ஆசிரியர்.
வேதாரண்யம் என்று இந்நாளில் சொல்லப்படும் திருமறைக்காட்டில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் கனவில் மதுரை மீனாட்சி அம்மனே தோன்றி, சிவபெருமானின் திருவிளையாடல்களை இனிய தமிழில் பாடுக என அருளிட, அவ்வாறே செய்து திருவாலவாய் நகரில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. சிவனின் முக்கண்களாகப் போற்றப்படுவன பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், கந்த புராணம் ஆகியனவாம்.
மதுரை காண்டம், கூடல் காண்டம், திருவாலவாய் காண்டம் என மூன்றாகப் பிரித்து, 64 திருவிளையாடல்களை வகுத்துப் பாடியுள்ளார், பரஞ்சோதியார். பாடல்கள் எந்த வரிசையில், எவ்வாறு உள்ளனவோ, அவ்வாறே உரை நடையில் இந்நுாலாசிரியர் அமைத்துள்ளார்.
சிவபெருமான் தன் அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்புத்திறமும், திருவிளையாடல்களை நிகழ்த்திய காரண காரியங்களும் படிப்பவர் மனங்கவர்வனவாகும். இந்நுால், மதுரை நகரின் தல புராணமாகவும் போற்றப்படுகிறது.
தருமிக்குப் பொற்கிழி வழங்கியது, நரியைப் பரியாக்கியது, வளையல் விற்றது போன்ற கதைகள் பலவும் இந்நுாலில் உள்ளன; படித்து மகிழலாம்.
– கவிக்கோ ஞானச்செல்வன்