‘எந்த வீட்டில் இருக்கிறது இப்போது திண்ணை. புழுதி அடங்க எந்த வாசலும் தெளிக்கப் படுவதில்லை. புள்ளியிட்ட கோலமின்றி புழுதி அடித்துப் பூத்துக் கிடக்கிறது.
‘செம்மண் கோலமோ, மாக்கோலமோ, நெளி கோலமோ நெஞ்சில் மட்டும் தான். ஸ்டிக்கரிலே எல்லாம் வந்தாச்சு கிழித்து எறிவதற்குச் சவுகரியம்’ என்று பண்பாட்டுச் சிதைவை ஆதங்கத்தோடு சுட்டி, ‘நம்முடைய அடையாளங்களை நம் தாய் மண்ணில் இன்னமும் தோண்டி எடுக்க முடியும்’ என்ற நுாலாசிரியர், பல்வேறு இதழ்களில் வெளியான, 16 சிறுகதைகள் மூலம் நுணுக்கமாகப் பல படிப்பினைகளை உணர்த்தியுள்ளார்.
‘கிராமத்தில ஒருத்தன் உசந்திட்டாப் போதுமய்யா, ஒவ்வொருத்தனையும் மேலே ஏத்தி விட்டுடலாம்’ பயிராகப் பயன்படுவான் என்ற எதிர்பார்ப்பில் உள்ள பெரியவரின் நம்பிக்கை பொய்த்துப் படித்து உயர்ந்து விட்ட அவன் களையாகிவிட்ட யதார்த்தம், ‘மாறு தடத்திலும்...’ ‘விதை நெல் வாங்க கொண்டு வந்த பணத்தை, வாரி வழங்கி நொடித்துப் போய், வாழைச் சருகில் படுத்துத் துாங்கும் பெரியவரின் அவலங்கண்டு மனம் கலங்கி, அவருக்கு வேட்டி வாங்க முடிவு செய்யும் மனித நேயத்தை, ‘உயிர்ச்சுழி’யிலும் இப்படி ஒவ்வொன்றும் நயமான படைப்புகள்.
கிராமத்துச் சூழலை, இயல்பான வட்டார மொழியில், மிக எளிமையாக, கற்பனைக் கலப்பின்றி, வலிய திணிக்கும் கருத்துகளைத் தவிர்த்து, வசீகரம் பெறும் இப்படைப்பை அசை போடச் செய்யும் உத்தியும் அறிந்த பாரதி பாலனின் இப்படைப்பு, நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் ஐயமில்லை.
– பின்னலுாரான்