சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முருகன் தலம் குமரக் கோட்டம். அந்தக் குமரக் கோட்டத்ததில் அர்ச்சகராக விளங்கிய காளத்தியப்ப சிவாச்சாரியரின் மகன் கச்சியப்ப சிவாச்சாரியார். அவர் படைத்த நுால் கந்த புராணம்.
உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்னும் ஆறு காண்டங்களில், 135 படலங்களை அமைத்து, 10 ஆயிரத்து, 345 பாடல்களை பாடியுள்ளார் கச்சியப்ப சிவாச்சாரியார். 45 படலங்களுக்கான உரையுடன் முதல் பாகமாக இந்த நுால் வெளிவந்துள்ளது.
தெளிவுரை, அருஞ்சொற்பொருள் என்னும் இரண்டு அமைப்பில் இந்த நுாலில் உரை அமைந்துள்ளது.
உரையாசிரியர் சிவ.சண்முகசுந்தரம் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பதால், எளிமையான தமிழ் நடையில் தெளிவுரையைப் படைத்துள்ளார். பொருள் விளங்காமல் இருக்கும் சொற்களைக் கண்டறிந்து, அவற்றிற்கு அருஞ்சொற்பொருள் வழங்கப்பட்டுள்ளமையால் பாடல்கள் எளிமையாகப் புரிகின்றன.
நுாலின் கடைசிப் பகுதியில் ஒவ்வொரு காண்டத்திலும் உள்ள பாடல்களின் முதல் குறிப்புச் சொற்களை அகர வரிசையில் தந்திருப்பதால், எந்தப் பாடலைப் பார்க்க வேண்டுமோ அந்தப் பாடலை உடனே பார்க்கும் வகையில் உரையாசிரியர் வழங்கியிருக்கிறார். தமிழ் நுால் வெளியீட்டில் பாரம்பரியம் மிக்க பாரி நிலையத்தாரால் வெளியிடப் பெற்றுள்ள இந்த நுாலின் அச்சும், அமைப்பும் மிகவும் அழகாக அமைந்துள்ளன.
– முகிலை இராசபாண்டியன்