இரண்டாம் உலகப்போரின் உச்சமான ஸ்டாலின்கிரேட் போர்க்களத்தில், கடுமையான வான்வழி குண்டுவீச்சுகள் நிகழ்ந்து கொண்டிருந்தபோது, எரவாடா சிறையில், 1942 -வாக்கில் பெரும்பான்மையான பகுதி எழுதப்பட்டதாகக் கூறப்படும் நுாலின் மறுபதிப்பே இந்நுால். பண்டைக்கால இந்தியாவில் குடும்பங்கள், தனியுடைமைப்போக்கு, வர்க்கங்கள், அரசு போன்றவற்றின் தோற்றத்தை விவாதிக்கிறது.
பண்டைக்காலச் சுவர்கள், அகழிகள் பதுக்கி வைத்திருந்த வரலாற்றுத் தடயங்கள், பண்டைய மக்களின் கோரைத்தாள்கள், இலைகள் போன்றவற்றிலும் குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டன.
ஆயினும், இந்தியாவைப் பொறுத்தவரை ஏராளமான அன்னிய படைெயடுப்புகளும், தொடர் போர்களும், ஆட்சி மாற்றங்களும், அடக்குமுறைகளும், புரட்சிகளும், நெடிய வரலாறுகளையும், தொன்மை இலக்கியங்களையும் தெளிவான காலவரையோடு முறைப்படுத்தாதபடி ஆக்கின.
வரலாற்றுக் குழப்பங்களை அறிவியல் ரீதியில் அணுக வேண்டுமெனில், அடிப்படையான சரித்திரத் தொடர்புகளைச் சார்ந்த நிகழ்வுகள், அவை தோன்றுவதற்கான மூலக் காரணங்கள் போன்றவை தொடர்ந்து ஆய்ந்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு, பண்டைய இந்திய சரித்திரத்தின் மீதான ஒரு மார்க்சீயப் பார்வையாக இந்நுாலைப் படைத்திருக்கிறார் ஆசிரியர் டாங்கே.
இந்தியாவில், கி.மு., 3000 வாக்கிலும் நாகரிகம் இருந்ததென ஐரோப்பியர்களும் ஏற்கும் நிலையும் உண்டானது. எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், சால்டியர்கள் ஆகியோருக்கும் தொன்மை இந்தியர்கள் பிந்தியவர்களல்ல என்பது நுாலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய சமூகத்தில் வழங்கி வந்த கூட்டுப் பங்கீட்டு வாழ்க்கை முறைமைகள், பெண் குலத்தின் ஆதிக்க வீழ்ச்சி, அரசமைப்பின் தோற்றம், அடிமை முறை, மகாபாரதப் போர் போன்ற ஏராளமான பழம்பெரும் வரலாறுகளும் இடம்பெற்றுள்ளன.
–
மெய்ஞானி பிரபாகரபாபு