சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட, எட்டு சிறுகதைகள் கொண்ட மொழிபெயர்ப்பு தொகுப்பு நுால். கதைகள் மிகவும் இயல்பாக அமைந்து உள்ளன. அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்து கவித்துவமாக வெளிப்பட்டுள்ளன. மானுட உளவியலையும், இந்தியாவின் நவீன சமூக அமைப்பு முறையையும் கதாபாத்திரங்கள் துல்லியமாக விளக்குகின்றன.
முதல் கதை, ‘வாழ வேண்டும் என்ற ஆசை’ என்ற தலைப்பிலானது. விரும்பிய ஆசை, மிக இயல்பாக நிறைவேறுவதை எளிமையாக உறுதி செய்து ஒரு சிற்பம் போல் வடித்துள்ளார் ஆசிரியர். தொகுப்பின் இறுதிக் கதை, ‘பேய்க்கரும்பு’ என்ற தலைப்பிலானது. மிகவும் இயல்பான காதல் வாழ்வை சித்தரிக்கிறது.
படுக்கை அறையில் கணவன், மனைவி உரையாடலில் உயிர் பெறும் பெண் கதாபாத்திரம் மிக இயல்பாக அமைந்துள்ளது. மத்திய தர வர்க்கத்தின் மனநிலையை கதை சம்பவங்கள் விவரிக்கிறது. பாத்திரங்களின் எண்ணம், ஒரே நேர் கோட்டில் மிக துடிப்பாக, பயணிப்பதை பார்க்க முடிகிறது. அதே நேரம் உரையாடல் அமைதியான நதியைப் போல் ஓடுகிறது.
முடிவு, உலக இயல்பை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இயல்புகளை கோர்த்து வண்ண மாலைகள் கட்டும் அழகு, கதைகளில் மிளிர்கிறது. எளிய சம்பவங்கள் வண்ணங்களால் நிரம்பியுள்ளன.
திருப்பங்களுடன் அல்ல, இயல்பான போக்குடன் கதைகள் அமைந்துள்ளன. எதிர்பாராத ஆனால் விரும்பும் முடிவுகளை கொண்டுள்ளன. எளிய நடையில் புனையப்பட்டுள்ளது. மொழிபெயர்த்தவர் அலமேலு கிருஷ்ணன். ஆடம்பரமற்ற சொற்சேர்க்கையால் எளிமையாக தமிழில் அமைந்துள்ளார்.
கவிதை மனதுடன் நிதானமாக உள்வாங்கும் வகையில் படைப்புகள் உள்ளன. இந்தியாவின் பன்முக அடையாளத்தை அறிமுகம் செய்யும் இலக்கிய நுால்.
– மலர் அமுதன்