நடைமுறையில் பதிவு செய்ய வேண்டியவை பல. அவற்றுக்கான சட்ட விதிகளையும், பதிவுத்துறையின் அமைப்பையும் விளக்கும் நுால்.
நிலம் வாங்கும் போது பதிவு செய்கிறோம். பிறப்பு, இறப்பு, திருமணத்தையும் பதிவு செய்கிறோம். இவை எல்லாம் கட்டாயமானவை. அனைவரும் சட்டம் படித்தவர் அல்ல. சட்டப்படி செயல்படுகிறோம். அதற்கு, அடிப்படை அறிவு தேவை. அதை நிறைவு செய்கிறது இந்த நுால்.
மிக எளிமையாக பதிவு சட்டம் தொடர்பான விபரங்களை சொல்கிறது. கேள்வி – பதில் பாணியிலும், சிறு குறிப்புகளாகவும், முழு சட்ட வரைவு என தமிழிலும் தந்துள்ளது.
முதல் பகுதி, பதிவு சட்டம் எதற்கு என்ற கேள்வியில் துவங்கி விளக்குகிறது. அடுத்து கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய ஆவணங்கள் பற்றி கூறுகிறது.
தமிழகத்தில் பதிவுத்துறையின் பணி அமைப்பு முறையையும் விளக்குகிறது. வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை சட்ட அறிவுடன் அணுக உதவும் கையேடு.