பவுத்த சமூகம், தத்துவம், இலக்கியம், வரலாறு என, பல தகவல்களை தொகுத்திருக்கும் நுால். பல நுால்களில் வாசித்த தகவல்களை தொகுத்து கட்டுரைகளாக எழுதப்பட்டுள்ளது. சமத்துவத்தை முன் நிபந்தனையாக கொண்டது பவுத்தம். ஒரு கடல் போன்றது. இது தொடர்பாக, பல மொழிகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் முக்கிய புத்தகங்களை வாசிக்கும் முயற்சியாக அமைந்துள்ளது. உள்வாங்கியவற்றை, 50 கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார்.
ஜென் கதைகள் சிலவும் உள்ளன. துணுக்கு போன்று அமைந்துள்ள கதை ஒன்று – வாயில் நுரை தள்ளியவாறு அதிவேகமாக ஓடிக் கொண்டிருந்தது குதிரை. அதன் மீது அமர்ந்திருந்தவன் முகம், வெறுமையாக இருந்தது. எந்த வேலையும் இல்லாதது போல் அமர்ந்திருந்தான். அவனிடம், ‘எங்கே போகிறாய்...’ என்றான் சாலை ஓரம் நின்றவன். ‘எனக்கு தெரியாது... குதிரையிடம் கேள்...’ என்றான் குதிரைக்காரன். இப்படி சுவாரசியமாக உள்ளது.
– அமுதன்