அறிஞர்களை, ‘நாலும் தெரிந்தவர்’ என்பர். உண்மையிலேயே, இந்த சொலவடைக்குப் பொருத்தமானவர், நாணயவியல் அறிஞர் இரா.கிருஷ்ணமூர்த்தி தான். இவர், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், கணித்தமிழ் வளர்ச்சி, நாணயவியல் ஆய்வு, பத்திரிகை ஆசிரியர் பணி என்ற தளங்களில் புரிந்துள்ள சாதனைகளை கூறுகிறது, இந்த வாழ்க்கை வரலாற்று நுால்.
இவரது கல்விப் பயணம், சூறாவளியானது. எல்லா நிலைகளிலும் முதன்மை நிலையில் தேர்ச்சி பெற்றுள்ளார். உண்மையான கல்வியைக் காடு, மேடுகளிலும், மலைகளிலும் தான் கற்றிருக்கிறார். உயிரியலில் துவங்கிய கல்லுாரிக் கல்வி, புவியியல் பாடத்தில் நிலைகொண்டிருக்கிறது.
தமிழ் இலக்கியத்தில், சங்க கால வரையறையை, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர் அறிஞர்கள். இந்த பழமை, குறைந்த பட்ச எல்லை தான்; அதிக பட்ச எல்லை கி.மு., 5ம் நுாற்றாண்டுக்கும் முற்பட்டது என்று, நாணயவியல் ஆய்வுகள் வாயிலாக நிறுவியுள்ளார் இரா.கிருஷ்ணமூர்த்தி. சங்க காலப் பாண்டியனும், சோழனும், சேரனும் கட்டிய அரண்மனைகள் இப்போது இல்லை. அவர்களைப் பாடிய சங்க இலக்கியங்கள் சில மட்டுமே கிடைத்துள்ளன.
இலக்கிய ஆதாரங்களை, ஆய்வுலகம் ஏற்க தயங்கிய சூழ்நிலையில், பொருத்தமான வரலாற்று ஆதாரங்களாக, பெருவழுதி, மாக்கோதை என்று அடுக்கடுக்காக சேர, சோழ, பாண்டியர் வெளியிட்ட நாணயங்களைக் கண்டுபிடித்து, ஆய்வு செய்து நிறுவியதால், சங்க கால நாணயவியலின் தந்தை என்னும் பெரும் தகுதியைப் பெற்றுள்ளார். சங்க கால நாணயவியல் ஆய்வில் மேன்மை கொண்டதால் தான், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இந்திய அரசின் உயரிய, தொல்காப்பியர் விருதை, ஜனாதிபதியின் திருக்கரத்தால் இவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது.
எழுத்துச் சீர்மையை முதன் முதலில் பத்திரிகையில் பயன்படுத்திய பெருமையுடன், ‘தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்’ என்ற நுாலையும் படைத்துள்ளார். பண்டைத் தமிழ் எழுத்து முறை பற்றியும், நாணயவியல் ஆய்வு பற்றியும், 19 நுால்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் படைத்ததுடன், 57 ஆய்வுக் கட்டுரைகளைப் பன்னாட்டு ஆய்வரங்குகளில் சமர்ப்பித்து பெருமை பெற்றுள்ளார் இரா.கிருஷ்ணமூர்த்தி.
கணினி எழுத்துகள், அச்சுக்கு ஏற்ற வடிவத்தில் இல்லாத சூழலில், அழகிய அச்சு எழுத்து வடிவங்களை உருவாக்கி, தமிழ் அச்சு ஊடகத்திற்கு முன்னோடி வழிகாட்டியாக திகழ்கிறார். பன்முக ஆற்றலுடன், நாணயவியல் ஆய்வில் முன்னோடியாக செயல்பட்டுள்ளதை இந்த நுால் எடுத்துக் காட்டுகிறது. எளிமையான மொழி நடையில் அமைந்துள்ளது. வாழ்க்கை வரலாற்று இலக்கிய உலகில், குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகிறது.
‘பள்ளி விடுமுறை விட்டால் போதும், முதல் ஆளாக வந்து விடுவார். படித்துறையில் இறங்கி, குளத்தின் மறுகரை வரை ஆர்வத்துடன் நீந்தி மகிழ்வார். கிராமச் சிறுவர்கள் எல்லாம், அங்கு தான் கூடுவர். கூட்டம் சேர்ந்ததும் நீச்சல் போட்டி, தினுசு தினுசான குட்டிக் கரணம் என, உற்சாகமாக ஆட்டம் நடக்கும்...’ இது, பக்கம், 21ல் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள, ‘தினுசு தினுசான’ என்னும் சொல்லாட்சி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கே உரியது. இது போன்ற வட்டார வழக்குகள், நுாலில் பல இடங்களில் மிளிர்ந்து சிறப்பு பெறுகின்றன.
முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தியுடன் தொடர்புடைய கல்வியாளர்கள், கணித்தமிழ் அறிஞர்கள், மொழி அறிஞர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் வழங்கியுள்ள தகவல்கள் மிக முக்கியமானவை. அன்பு, உண்மை, உழைப்பு, அடக்கம், அறிவுத்தேடல், மன்னிக்கும் மனப்பான்மை, எளிய அணுகுமுறை என, உயர்ந்த பண்புகளின் இருப்பிடமாக அவர் திகழ்வதை, அறிஞர்களின் அனுபவ மொழிகள் உணர்த்துகின்றன.
வாழ்க்கை வரலாற்று நுால்களில் இது மாறுபட்டது. சாதனையாளர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையுடன், சங்க கால வரலாறும், தமிழ் எழுத்துச் சீர்திருத்த வரலாறும், கணித்தமிழ் வரலாறும், இதழியல் வரலாறும் இணைந்து வெளிப்படுகின்றன.
‘இன்டர் மீடியட்’ படிக்கும் வரை, காலில் செருப்பு இன்றி நடந்ததையும், கசங்கிய சட்டை அணிந்ததையும், கோலி அடித்ததையும், பம்பரம் விளையாடியதையும் இன்னும் பலவற்றையும், உள்ளது உள்ளபடி வெளிப்படுத்துகிறது. அந்த காலத்தில் நிலவிய கல்விச் சூழலையும், வாழ்க்கையையும், சுதந்திர போராட்ட கொந்தளிப்பையும் வெளிப்படுத்துகிறது. பாடங்களை கற்றுத் தரும் அனுபவ செறிவு மிக்க நுால்.
– முகிலை ராசபாண்டியன்