அகம்பாவமற்ற மொழியில் எழுதப்பட்டவை நகுலன் படைப்புகள். அவர் எழுதிய சிறுகதைகள், மொழிபெயர்ப்பு கதைகள், குறுநாவல்கள் தேடி கண்டுபிடித்து தொகுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையை பற்றிய வெள்ளை அறிக்கையாக உள்ளன பல கதைகள். கற்றலும், கற்பித்தலுமாக மிளிர்கின்றன. தொகுப்பை உருவாக்குவதற்கு பட்ட சிரமங்களை, பதிப்புரையில் சுருக்கமாக பகிர்ந்துள்ளார் தொகுப்பாசிரியர்.
‘கதைகளை தொகுத்து, ஒரு பதிப்பாளரிடம் கொடுத்தேன். அவர் தொலைத்து விட்டார். எப்போது, எதிலெல்லாம் எழுதினேன் என்பது என் நினைவில் இல்லை. முடிந்தால் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்...’ என, நகுலன் கூறியதாக பதிவு செய்துள்ளார். படைப்புகளைக் கண்டுபிடித்த விதம் பற்றியும் விளக்கியுள்ளார். நகுலன் படைப்புகள் பற்றிய முன்னோட்ட பார்வையுடன் ஒரு கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. படிக்கும் போது எளிய விசாரணையாக, பல கேள்விகள் வந்து நிற்கும்.