ஆப்ரிக்க நாடான சூடானில் வசிக்கும் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால். ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் பெயர்த்துள்ளார் பிலிப் சுதாகர். வள வள தாளில், பொருத்தமான ஓவியங்களுடன் இணைத்து, புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘வலிகளற்ற மகிழ்ச்சிக்கு மதிப்பு ஏதும் இல்லை...’ என, முதல் கவிதை சொட்டுகிறது. வாழ்வின் தகிப்பை கேள்விகளாக்கி, சொல்லில் சிற்பம் செதுக்கும் முயற்சியாக, மன உணர்வின் வெளிப்பாடாக உள்ளது.
ஒரு பலவீனமான கவசம் அணிந்தவரின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் சொற்கள் கோர்க்கப்பட்டுள்ளன. வாசிப்பு, காட்சி, அனுபவம் என்பவனவற்றின் ஊடாக பயணப்படுகிறது. சூழலின் சுமையை உள்வாங்கிய சொற்சித்திரம். இயற்கையை வினோதமாக ரசிப்பது தான் கவித்துவம். அந்த பண்பு பல கவிதைகளில் வெளிப்பட்டு உள்ளது. சிந்தனை என்ற தலைப்பில், ‘நிலவு நொறுங்கி இரவானது...’ என்கிறார். உணர்வை நிரப்பும் புதிய வரவு.
– அமுதன்