ராம நாமம் பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரியதைப் போலவே, ராம நாமத்தை உச்சரிக்கும் அனுமனும் போற்றுதலுக்குரியவர்.
வன வாசத்திற்கு பின் அனுமன் வந்தாலும், அடுத்தடுத்த அவதாரங்களிலும் ராம பக்தனாகவே அனுமன் தொடர்கிறார்; கிருஷ்ணரை புறக்கணிக்கிறார் எப்படி என்பதை கதையோட்டத்துடன் விவரிக்கிறார் ஆசிரியர் பிரபுசங்கர்.
வீரம், ஆற்றல், மேன்மை, விசுவாசம், நல்லொழுக்கம், மனதாலும் தவறு நினையாத நல்ல குணம் இவையெல்லாம் நினைவு வரும். அது மட்டுமல்ல... சொல்லும் வார்த்தைகளின் இலக்கணமாக திகழ்ந்தவர் என்பதை அனுமன் கோர்த்த வார்த்தைகளின் வாயிலாக சொல்கிறார்.
ராவண போரின் போது ரதத்தில் வந்த ராவணனுக்கு ஈடாக, ராமனை தன் தோள்களில் சுமந்து மனித சாரதியாய் போரின் வெற்றிக்கு உதவியவர். ஆனாலும் வெற்றியின் செருக்கு தலைக்கனமாக மாறாமல், தன்னடக்கமாக ஒரு தொண்டனாகவே வாழ்ந்தவர் அனுமன்.
போரில் அனுமனின் ஆற்றலை ஆசிரியர் விவரிக்கும் போது, போர்க்கள காட்சியை நேரில் பார்ப்பது போன்ற பரவசத்தை தருகிறது.
மற்றவர்கள் பிரமிக்கும் மாவீரனாக இருந்தாலும், ராமனுக்கே ஆலோசனை சொல்லும் மந்திரியாக இருந்தாலும், ராமனின் பாத தரிசனத்திற்காக காத்திருக்கும் ஒப்பற்ற தொண்டன் அனுமனின் சேவைகளை எத்தனை முறை படித்தாலும் சலிக்காது.
இத்தனை பெருமைக்குரிய அனுமனுக்கு ராமன் செய்த சிறப்பு மிகப்பெரியது. அனுமனுடன் ராமன் கொண்ட நட்பு, வன வாசத்தில் தான். அப்போது உடனிருந்தவர்களுக்கு அனுமனின் ஆற்றலும், அறிவும், மதிநுட்பமும் தெரியும்.
அயோத்தியில் அனுமனை எப்படி புரிய வைப்பது... கதையின் வாயிலாக விவரிக்கிறார் ஆசிரியர். புத்தகத்தை படித்து முடிக்கும் போது ராமனைத் தாங்கும் அனுமனை, நம் மனது தாங்கி பிடித்து ஆராதிக்கும் என்பது உண்மை.
– எம்.எம்.ஜெ.,