கால மாற்றங்களால் மொழி வழக்குகள் மாறும்போது இலக்கியங்களில் மட்டுமன்றி, இலக்கணங்களிலும் மாற்றுப்பார்வைகள் தோன்றி வருகின்றன. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்திலக்கணங்களுடன் புலமையிலக்கணத்தையும் தந்த, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் அறுவகை இலக்கண நுாலில் உள்ள மாறுபட்ட பார்வைகளை ஆய்ந்து விளக்கியுள்ளார் நுாலாசிரியர்.
எழுத்திலக்கணத்தின் உருவோசையியல்பில் அலகெழுத்து, கூட்டெழுத்து எனும் இரண்டை இணைத்து, குறிப்பெழுத்தை இலக்கணத்தில் சேர்த்து, பிற இலக்கணிகள் விரித்துக் கூறாத அலகுகள், எழுத்து வடிவங்கள், கூட்டெழுத்து வரி வடிவங்கள், எழுதும் முறைகள் படைத்திருப்பதை விளக்குகிறார்.
நிலையியல்பில் குறில், நடு, நெடில் எனும் புதிய வகைப்பாட்டில் மாறுபட்ட மாத்திரை அளவுகளைக் கூறுவதோடு, ஆய்த எழுத்து கழுத்தில் பிறப்பதாகக் விளக்கிப் புதிய அணுகுமுறையில் இனப்படுத்துவதையும், எழுத்துக்களை ஆண்பால், பெண்பால், அலிப்பால் என்று வகைப்படுத்துகிறது.
இதை ஆய்ந்துரைத்து, புணர்ச்சியியல்பில் குற்றியலிகரம், குற்றியலுகரம், மெய்ம்மயக்கம் போன்றவற்றில் அறுவகை இலக்கணம் மாறுபட்டு, பிற இலக்கணங்கள் ஏற்கும் ஒற்றளபெடையை மறுப்பதையும் குறிப்பிடுகிறார்.
பொதுவியல்பு, பிரிவியல்பு, சார்பியல்பு, திரிபியல்பு என்று வகைப்படுத்தப்பட்ட சொல்லிலக்கணம், பேச்சு வழக்கில் பிறழும் சொற்கள் ஏற்பதையும், சொற்களுக்கு நிறங்கள் வழங்குவதையும் அறிய முடிகிறது. பிரிவியல்பில் பல்வேறு பிரிவில் சொற்களை வகைப்படுத்தி, வேற்றுமை உருபுகளைப் பயன்பாட்டு நோக்கில் தொடரியல் அடிப்படையில் விளக்குவதும் மாறுபட்ட அணுகுமுறையாகக் கருதப்படுகிறது.
பொருளிலக்கணத்தில் மரபிலிருந்து மாறுபட்டுப் பெண்களை மையப்படுத்தி, அகப்பொருளியலில் மட்டுமே துறை பேசப்படுவது, தலைவனின் நிலை கூறப்படாமை, புறப்பொருளியலில் நிலத்தியல்பில் கூறப்படும் ஐந்திணை விளக்கங்கள் போன்ற பலவும் விரிந்த ஆய்வுக்குரியன. இலக்கண ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் படிக்க வேண்டிய நுால்.
– மெய்ஞானி பிரபாகரபாபு