ஆடிப் பாடும் சிறுவர்களுக்கு கதை கேட்பது கொண்டாட்டமாய் இருக்கும். அதுவும் பாடல் வழியே கதை சொல்லத் தொடங்கினால் சேர்ந்து பாடுவர். குழந்தைக் கவிஞர்களின், பல்சுவை கதைப் பாடல்கள் தீபாவளியின் தினுசு தினுசு பட்சணங்களாய் இந்த நுாலில் தரப்பட்டு உள்ளன. பல்சுவையுடன் சுவைத்து மகிழலாம்.
எலி, பூனை, சிங்கம், முயல், ஆமை, பாம்பு, யானை போன்ற விலங்குகளும், கொசு, கோழி, காக்கை, குருவி, மயில், மைனா போன்ற பறவைகளும், கடவுளும் கதைகளில் வந்து கவர்கின்றன. ‘கொழுக்கட்டை ஏன் வேகவில்லை...’ என்பதற்கு அந்தாதியாக விடை கூறும் நாட்டுப்புறப் பாடலில், ‘எறும்பு கடித்தது’ விடையாக வருகிறது. இது சுவையைக் கூட்டுகிறது.
கொசுவின் பெருமை, ஏப்பம் விட்ட குரங்கு, கடலின் ஆழம் போன்றவை இனிமை தரும் பாடல் கதைகள். பாட்டியின் பழம் பானைக்குள் புகுந்த எலி, நெல் தின்று மாட்டிக் கொண்டது சுவாரசியம். ‘கள்ள வழியினில் செல்பவரை எமன், காலடி பற்றித் தொடர்வானடா!’ என்று முடியும் பாடல் மனதில் பதிகிறது.
முரசுக் கட்டிலில் துயின்ற மோசிகீரனாருக்கு, சேரமன்னர் இரும்பொறை சாமரம் வீசிய, ‘முரசும் அரசும்’ கதைப் பாடல், வரலாற்றை வளரும் தலைமுறைக்கு உரைக்கும். சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை வீட்டில் குன்றக்குடி அடிகளார் சிறுவயதில் பால் ஊற்றி, வறுமையை மாற்றிய, ‘தினம் ஒரு திருக்குறள்’ தொகுப்பாசிரியரின் கதைப்பாடல் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. பாடவும், ஆடவும், நடிக்கவும் சிறுவர்களுக்கு பரிசாகத் தரவேண்டி நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்