தனித்துவத்துடன் வெளியாகியுள்ளது, விகடன் தீபாவளி மலர். ஆன்மிகம், கலை, இசை, வரலாறு, சினிமா, சின்னத்திரை, சிறுகதை, கவிதை, நகைச்சுவை, பொதுத் தகவல் என பல்சுவைகளையும் உள்ளடக்கியுள்ளது.
காசி அன்னபூரணியின் அருள்மிகு ஓவியம் அட்டையில் மிளிர்கிறது. தொற்று காலத்தில் கடமை தவறாத களப்பணியாளர்கள் பற்றிய கட்டுரை சிறப்பு. கண் துஞ்சாமல் கடமையாற்றும் அதிகார குடும்பங்களில், கொண்டாட்ட இயல்பை பேட்டிகளால் சித்தரித்துள்ளது அருமை.
கத்தரிக்காய் முதல், நவீன தொழில் நுட்பம் வரையிலான பொருண்மைகளில் ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன. சிம்லா வரலாறு சுவாரசியம் தருகிறது. கரைந்த காலத்தை காட்டுகின்றன கறுப்பு, வெள்ளை புகைப்படங்கள். உழைப்பின் உயர்வு, வட சென்னை மண் சார்ந்த கட்டுரையில் கவிந்துள்ளது.
வண்ணப் படங்களுடன் சினிமா பிரபலங்களின் அனுபவங்கள் சுவையூட்டுகின்றன. யுடியூப் சேனலால் பிரபலமானவர்கள் பற்றியும் தொகுப்பில் உள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களுடன், நம்பிக்கையூட்டும் வகையில் தகவல்கள் அமைந்துள்ளன. மகிழ்ச்சியின் இயல்பை சமூகம் சார்ந்து கட்டமைத்துள்ளது. புனைவுகளின் பொருளடக்கம் போல், விளம்பரங்களின் பொருளடக்கமும் பிரத்யேக பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. பல வண்ண மலர்கள் மலர்ந்து மணம் பரப்பும் தோட்டம்.
– மலர்