பிரபல நடிகர் அவ்வை டி.கே.சண்முகம். அவரது மகன், குழந்தைப் பருவம் பற்றி எழுதியுள்ள அனுபவ நுால். தாய், தந்தை மற்றும் ஆசான்களுடன் பழகிய நாட்களை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.
புகழ் பெற்ற குடும்பத்தில் பிறந்த சிறுவனின் இளமைக் காலம் மிளிர்கிறது. சம்பவங்கள், நுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிரகாசித்த நட்சத்திரங்களின் இயல்புகளை, அனுபவச் சுவட்டில் இருந்து கொட்டியுள்ளார். பணிவும், நெருக்கமும் வெளிப்படுகிறது; நகைச்சுவை படர்கிறது.
பிரபலமாக இருந்த கலைவாணர், இசைத்தமிழ் அறிஞர் சம்பந்தன், இசை அரசர் தண்டபாணி தேசிகர், பாவேந்தர் பாரதிதாசன், பெருந்தலைவர் காமராஜர், நடிகை கே.பி.சுந்தராம்பாள், தவத்திரு சங்கரதாஸ் சுவாமி மற்றும் பிரமுகர்களை, குழந்தை பருவத்தில், தந்தையுடன் சந்தித்த விபரங்கள் பதிவாகியுள்ளன.
தந்தை பற்றி மிக நுட்பமாக நினைவு கூர்ந்து உள்ளார்.
புத்தகத்திலிருந்து...
அப்பாவுடன் கோவிலுக்கு போவோம். தெய்வ சன்னிதியில் கூச்சப்படாமல் பாடச் சொல்வார்; தயங்கினால், அவரே துவங்கிவிடுவார். அந்த பழக்கம் இப்போதும் துணை புரிகிறது.
அப்பாவுக்கு வரும் கடிதங்களுக்கு, நான் தான் பதில் எழுதுவேன். அதில், வடிவமைப்பு, தேதி போடும் இடம் என எல்லா ஒழுங்கையும் கவனிப்பார். சீரில்லை என்றால் தயவு தாட்சண்யமின்றி கிழித்து போடுவார்.
நாடக விழாக்களுக்கு தலைமை தாங்க அழைப்பு வரும்; ஒப்புக்கொள்வார். அழைப்பிதழ் ஆங்கிலத்தில் அச்சிட்டிருந்தால், வர மறுத்துவிடுவார். தமிழ் நாடகங்களுக்கு ஆங்கிலத்தில் அழைப்பா என்ற ஆதங்கம் தானே தவிர, மொழி மீது வெறுப்பு கிடையாது.
மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் நடிக்க அழைக்க வந்தார் ஜெமினி வாசன். வெளியூரில் நாடகம் இருந்ததால் மறுத்துவிட்டார் அப்பா. பின் அந்த முடிவை, வாசனே பாராட்டினார். வீட்டில் எங்களுக்காக ஒரு நுாலகம் வைத்திருந்தார். ஞாயிறு தோறும் அதில் படிக்க வேண்டும். புத்தக கண்காட்சிகளுக்கு அழைத்துச் சென்று, கை நிறைய புத்தகங்கள் வாங்கித் தருவார்.
இவ்வாறு, நினைவுகளை பகிர்ந்துள்ளார் கலைவாணன். சுவாரசியம் தரும் காலப் பெட்டகம்.
– மலர் அமுதன்