எளிய தமிழ் நடையில் புதினங்கள் படைத்த பெருமைக்கு உரியவர் தமிழ்வாணன். துப்பறியும் புதினங்களுக்கு முன்னோடியாக கொடிகட்டிப் பறந்தவர். மர்ம நாவல்கள், துப்பறியும் நாவல்கள் என்று ஆர்வத்தைத் துாண்டும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரர்.
சங்கர்லால் என்னும் துப்பறியும் பாத்திரத்தை உருவாக்கிப் பல நாவல்களைப் படைத்தவர், சொந்தப் பெயரிலேயே, ‘தமிழ்வாணன் துப்பறிகிறார்’ என்றும் படைத்துள்ளார். பெர்லின், டோக்கியோ, சிகாகோ முதலான அயல்நாட்டு நகரங்களின் பெயர்களை, தமிழகத்தில் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் அறிமுகம் செய்தவர் தமிழ்வாணன்.
‘கருநாகம், நடுநிசிநேரம், இரண்டாவது நிலா, என்னைத் தொடாதே, கான்ஸ்டபிள் கண்ணம்மா’ என்னும் ஐந்து மர்ம நாவல்களின் தொகுப்பாக வந்துள்ளது. நிஜமாக நடந்ததுபோல் எழுதும் இயல்பு கொண்ட தமிழ்வாணன், அந்த உண்மைக்குக் கூடுதல் சாட்சியாக நிஜ ஊர்ப் பெயர்களையே பயன்படுத்தியுள்ளார். எல்லா நாவல்களிலும் கதை நிகழிடத்தை உணர்ந்து கொள்ளும் வகையில் தெள்ளத் தெளிவாகப் படைப்பதில் கை தேர்ந்தவர் என்பதை எடுத்துரைக்கின்றன. பயண நேரத்தைப் பயனுள்ள பொழுதாகக் கழிக்க விரும்பும் ஒவ்வொருவரும் பையில் எடுத்துச் சென்று படிக்க வேண்டிய மர்ம நாவல் தொகுப்பு.
– முகிலை ராசபாண்டியன்