தமிழக கிராமிய வாழ்வியல் முறையை விவரிக்கும் நுால். முற்றிலும் அனுபவம் சார்ந்து எழுதப்பட்டுள்ளது. எளிய நடையில் காட்சிப் பூர்வமாக உள்ளது.
மதுரை நகர் அருகே, 60 முதல், 80 வரையான காலத்தில், ஒரு கிராமத்தின் இயக்கம் மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. அன்றாட வாழ்வியல் மிக இயல்பாக வரையப்பட்டு உள்ளது.
புத்தகத்திலிருந்து...
எழுபதுகளின் இறுதியில், மலையாளிகள் சிலர் எங்கள் ஊருக்கு வந்தனர். மந்தையில் கொட்டகை போட்டு, பல சரக்கு, மூலிகைகளை குவித்தனர். இரண்டு கருங்குரங்குகளை, கொட்டகையின் முன் கட்டிப் போட்டனர். ஒலிபெருக்கியில் மலையாளம் கலந்த தமிழில் பேசினர்.
மூலிகைகளை இடித்து புடம் போட்டு, கருங்குரங்கு கறியுடன் வேக வைத்து லேகியமாக்கி விற்கப் போவதாக கூறினர். முன் பணம் செலுத்தி, ‘டோக்கன்’ வாங்கியவர்களுக்கு மட்டும் தான் லேகியம் கிடைக்கும் என்றனர்.
உள்ளூரில் சிலரை அழைத்து, இரும்பு உரலில் மூலிகைகளை இடித்தல், சலித்தல் போன்ற வேலைகளை செய்வித்தனர். அங்குமிங்கும் குதித்துக் கொண்டிருந்தன குரங்குகள். சிறுவர்கள் அவற்றை சீண்டி விளையாடினர்.
முதல் நாள், டோக்கன் வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. திடீர் என ஊரில், ‘கருங்குரங்கு லேகியம் சாப்பிட்டால், ஆண்மை விருத்தியாகும்; அரை மணிநேரம் கூட மனைவியுடன் கூடியிருக்கலாம்’ என, பேசிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து சிலர், இரண்டு டோக்கன் வரை வாங்கினர்.
மூன்றாம் நாள் மாலை, கருங்குரங்குகளை கொன்று தோல் உரித்தனர். அதன் இறைச்சியை, பெரிய அண்டாவில் வெந்து கொண்டிருந்த மூலிகைகளுடன் போட்டனர். குரங்குகள் கொல்லப்பட்டது, ஊர் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. இன்னொரு நிலையில், அதன் இறைச்சி உடலுக்கு நல்லது என மூடத்தனமாக நம்பினர்.
இரு பெரும் அண்டாக்களில் கிளறப்பட்ட லேகியம், நான்காம் நாள் காலை இறக்கி ஆற வைக்கப்பட்டது. பின், நுாற்றுக்கணக்கான ஹார்லிக்ஸ் பாட்டில்களில் அடைத்து, டோக்கன் வைத்திருந்தவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. அதை வாங்கியோர் கண்கள் பிரகாசித்தன.
ஏதோ அற்புத மருந்து போல் எண்ணி வீட்டை நோக்கி நடந்தனர். மறுநாள் காலை, மந்தையில் அந்த கொட்டகையைக் காணவில்லை.
இவ்வாறு காட்சிகளாக எழுதப்பட்டுள்ளது. கிராமப்புற நிகழ்வுகளை துல்லியமாக பதிவு செய்துள்ளது புத்தகம். மிகவும் சுவாரசியமாக உள்ளது.
– அமுதன்