கேரளாவைச் சேர்ந்த நாராயண பட்டத்திரி, தன் குருவுக்கு வந்த வாதநோயை, தனக்கு மாற்றுமாறு வேண்டிக் கொண்டார். குரு நலம் பெற, நாராயண பட்டத்திரிக்கு வாதநோய் ஏற்பட்டு உடலை வருத்தியது. இந்த நோயை தீர்க்குமாறு, கேரளாவில் உள்ள குருவாயூரப்பனை வேண்டுகிறார்.
வெறும் வேண்டுதலாக இல்லாமல் பாடல்களாக பாடுகிறார். 10 ஸ்லோகங்கள், ஒரு தசகம் வீதம் 1,000 ஸ்லோகங்கள் இயற்றுகிறார். ஒவ்வொரு தசகத்தையும் பெருமாளிடம் படித்து காட்டி, சரி செய்ததாக வரலாறு கூறுகிறது. ஸ்ரீமந் நாராயணீயம் இரண்டு பாகங்களாக வெளியிடப்படுகிறது. பாகம் – 1ல், பகவானின் அழகில் துவங்கி பக்தர்களின் பெருமை, பெருமாளின் பல்வேறு அவதார நோக்கம், மகிமை விளக்கப்பட்டுள்ளன.
பாகம் – 2ல், காதலாகி கிருஷ்ணனிடம் கசிந்துருகிய பெண்கள், பிருந்தாவன லீலைகள், காதலும் மோட்சத்துக்கான வழி என்பதை விளக்கும் பாடல்கள் என, சொல்லி செல்கிறார் நாராயண பட்டத்திரி. கோவர்த்தன மலை எடுத்தல், கோவிந்த பட்டாபிஷேகம், மதுரா நகர் புறப்படுதல், ஹம்சன் வதம் என தொடர்கிறது.
நிறைவாக கர்மங்களின் வினைப்பயன், பக்தியின் மேன்மை, தியானம் மற்றும் விஷ்ணுவின் பெருமையுடன் நிறைவடைகிறது. சர்வமும் கிருஷ்ணார்ப்பணம் என நினைப்பவர்களுக்கு, இந்த புத்தகம் சமஸ்கிருத ஸ்லோகத்துடன் இணைந்த வழிகாட்டியாக இருக்கும்.
– எம்.எம்.ஜெ.,